பக்கம் எண் :

சோழமண்டல சதகம்59

          சடையான் என்று தமிழ்ஓதும்
தேன்பாய் அலங்கல் கம்பனுக்குச்
          செழும்பா ரிடத்தில் செய்தநன்றி
வான்பா லிருக்கச் செய்துநலம்
          வைத்தார் சோழ மண்டலமே
82

சடையப்ப வள்ளலால் நன்கு பலகாலும் ஆதரிக்கப்பட்ட கம்பர் தன் இறுதிக் காலத்தில் வள்ளல் ஆதரித்த திறத்தையெல்லாம் ஒரு வெண்பாவாகப் பாடினார். அப்பாடல்

ஆன்பாலும் தேனும் அரம்பைமுதல் முக்கனியும்
தேன்பாய உண்டு தெவிட்டுமனம் - தீம்பாய்
மறக்குமோ வெண்ணை வருசடையா கம்பன்
இறக்கும்போ தேனும் இனி

என்பதாகும்.

இராமாயண உத்தரகாண்டம்

பூணி லாவும் கம்பன்நலம்
          பொலியும் தமிழால் பொலிவெய்திக்
காணு மாறு காண்டம்உறும்
          கதையில் பெரிய காதையெனும்
தாணி லாவும் கழல்அபயன்
          சபையில் பயில்உத் தரகாண்டம்
வாணி தாசன் அரங்கேற்ற
          வைத்தார் சோழ மண்டலமே
83

சடையப்ப வள்ளல் அபயன் மூலம் கம்பரைக் கொண்டு இராமாயணம் பாடுமாறு ஏற்பாடு செய்த பொழுது ஒட்டக் கூத்தரையும் இராமாயணம் பாடச் சிலர் ஏற்பாடு செய்தனர்.

கம்பர் தாம் பாடிய இராமாயணத்தை அரங்கேற்றிச் சொற்பொழிவாற்றிய போது ஒட்டக்கூத்தர் தாம் பாடியது வீண் என்று கருதி ஏடுகளைக் கிழித்தார். அதைக் கண்ட கம்பர் தாம் உத்தரகாண்டம் பாடவில்லை என்றும் உத்தரகாண்டத்திற்கு ஒட்டக்கூத்தர் பாடியதையே வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். அபயன் அவையில் ஒட்டக்கூத்தர் தன் உத்தரராமாயணம் என்னும் உத்தரகாண்டத்தை அரங்கேற்றினார். கலைமகளின் அருள்பெற்றதால் ஒட்டக்கூத்தர் வாணிதாசன் எனப்பட்டார்.