திருக்கோவையார் 398 ஆம் செய்யுள்
முன்னிகழ்வுரைத் துடறீர்த்தல்
அஃதாவது:
தலைவன் பரத்தமை ஒழுக்கம் காரனமாகப் பள்ளியின்கண் தலைவி ஊடி முகங்கொடாளாக அவளுடைய
ஊடல் தீர்க்கக் கருதிய தலைவன் பண்டு நிகழ்ந்ததொரு நிகழ்ச்சியை அவளுக்குக் கூறுவானாய்
அவள் விரும்பிக் கேட்குமாறு கூறி அவ்வூடலைத் தீர்த்தல் என்றவாறு. அதற்குச் செய்யுள்-
ஆறூர்
சடைமுடி அம்பலத்
தண்டரண் டம்பெறினும்
மாறூர் மழவிடை யாய்கண்
டிலம்வண் கதிர்வெதுப்பு
நீறூர் கொடுநெறி சென்றிச்
செறிமென் முலைநெருங்கச்
சீறூர் மரையத ளிற்றங்கு
கங்குற் சிறுதுயிலே.
|
முன்னி கழ்ந்தது நன்னுதற் குரைத்து மன்னு புனலூ ரன்மகிழ் வுற்றது.
(இ-ள்) ஊர்மழ விடையாய்-தவழாநின்ற
இளைய காளையினை உடைய நங்காய்; ஆறு ஊர் சடைமுடி அம்பலத்து அண்டர் அண்டம் பெறினும்-ஆறு
பரந்த சடைமுடியையுடைய அம்பலவாணராகிய தேவர் படைத்தருளிய உலகம் முழுவதையும் யாம் பெற்றாலும்;
வண்கதிர் வெதுப்பு நீறு ஊர் கொடுநெறி சென்று-ஞாயிற்றினுடைய வளவிய கதிர்கள் வெதுப்பிய
நீறு பரந்த கொடிய வழியைச் சென்று; இச்செறி மெல்முலைகள் நெருங்க-இந்த நெருங்கிய
மெல்லிய நின்னுடைய முலைகள் எம்முடைய மார்பினிடை வந்துபொருந்த; சீறூர் மரை அதளின்
தங்கு கங்குல் சிறுதுயில் மாறுகண்டிலம்-நெறியாற் சிறிய ஊரின்கண் பண்டு யாம் இருவரும்
கானவர் குடிலின்கண் மரையினது தோலாகிய படுக்கையிலே தங்கிய இரவின்கண் கொண்ட சிறிய
துயிலுக்கு ஒப்பாதல் கண்டிலேம் அல்லமோ அந்நிகழ்ச்சியை நீ நினைந்து மகிழ்ந்ததுண்டோ
என்க.
(வி-ம்.) ஆறு-கங்கை.
அம்பலத்தண்டர்-அம்பலவாணராகிய இறைவர். அண்டம்-உலகு. அவர்படைத்த உலகங்கள் முழுதும்
என்க. இனி அம்பலத்தண்டர் அண்டம் சிவலோகம் எனினுமாம். இக்கருத்தோடு,
தாம்வீழ்வார்
மென்றோட் டுயிலி னினிதுகொ
றாமரைக் கண்ணா னுலகு |
(திருக்.
1103) |
|