மூலமும் உரையும்121



திருக்கோவையார் 330 ஆம் செய்யுள்
வரவெடுத்துரைத்தல்

     அஃதாவது: வினைவயிற் பிரிந்த தலைவன் போரின்கண் வாகை சூடிப் பகைவர் அளந்த திறைப்பொருளையும், தன்னை வணங்காதவருடைய அடையாலப் பொருள்களையும் தந்தேருக்கு முன்னாகக் கொண்டு வெற்றிமுரசம் முழங்க ஆரவாரிக்கும் குதிரைகளோடே மீண்டுவந்தானாக. அவன் வரவுகண்ட தோழி பிரிவாற்றாது வருந்தி யிருக்கின்ற தலைவியின்பாற் சென்று அவன் வரவினைக் கூறிமகிழ்வித்தல் என்பதாம். அதற்குச்செய்யுள்,

பணிவார் குழைமொழி லொன்றில்லைச்
     சிற்றம் பலமனைய
மணிவார் குழன்மாட மாதே
     பொலிகநம் மன்னர்முன்னப்
பணிவார் திறையும் பகைத்தவர்
     சின்னமுங் கொண்டுவண்தேர்
அணிவார் முரசினொ டாலிக்கு
     மாவோ டணுகினரே.

வினை முற்றிய வேந்தன் வரவு புனையிழைத் தோழி பொற்றொடிக் குரைத்தது.

     (இ-ள்) வார்குழைப் பணி எழிலோன் தில்லைச் சிற்றம்பலம் அனைய-நீண்ட குழை என்னும் அணிகலத்தானுண்டாகிய அழகையுடையவனது தில்லையின்கண்ணுள்ள திருச்சிற்றம்பலத்தையே ஒக்கும்; மணிவார் குழல் மடமாதே-நீலமணி போலு நிறமுடைய நீண்ட கூந்தலையும் மடப்பத்தையுமுடைய நங்காய்; பொலிக-நீ பொலிவுறுவாயாக; நம்மன்னர்-நம் பெருமானாகிய அரசர்; பணிவார் திறையும்-வந்து தம்மை வனங்குவாராக உடம்பட்ட மன்னர்கள் அளந்த திறைப் பொருள்களையும்; பகைத்தவர் சின்னமும்-அங்ஙனம் வணங்காமல் பகைகொண்டு வந்தெதிர்த்த மன்னர்களுடைய அடையாளப் பொருள்களையும்; வண்தேர் முன்னாக் கொண்டு-தமது வலவிய தேருக்கு முன்னாகக் கொண்டு; வார் அணி முரசினொடு-வாராற் கட்டப்பட்ட வெற்றி முரசினது முக்ஷ்ழக்கத்தோடும்; ஆலிக்கு மாவோடு-ஆரவாரிய நின்ற குதிரைகளோடும்; அணுகினர்-உதோ வந்து சேர்ந்தனர். ஆதலால் இனி நீ மகிழ்வாயாக என்பதாம்.

     (வி-ம்.) பணி-அணிகலங் சிற்றம்பலம் போன்ற நலமுடைய மாதே என்க. மணி- நீலமணி. இது கூந்தலின் நிறத்திற் குவமை.