130கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 248 ஆம் செய்யுள்
அழுங்குதாய்க் குரைத்தல்

     அஃதாவது: தலைவி தமர் உணராமல்தலைவனுடன் சென்ற புன்னர் அவளது பிரிவுணர்ந்த செவிலி அடியொற்றித் தேடிச் சென்றவள் அப்பாலை நிலத்திலே எதிர்வருவாரை நோக்கி என்மகள் ஒருத்தியையும் பிறள்மகன் ஒருவனையும் நும்மெதிர் போகக் கண்டீரோ என்று வினவா நிற்ப, அவர் தம்முள் இவர்தாம் அந்நங்கையை எடுத்து வளர்த்தவர் போலும் என்று கூறிக்கொண்டு மேலும் முன்னிலைப் புறமொழியாக அவ்விருவரும் இப்பொழுது தம்மைக் கூட்டுவித்த இறைவனுடைய தெய்வப்பதியாகிய தில்லப் பழனங்களைச் சென்றணைவர் என்று தம்முட் கூறுவார் போன்று அவள் கேட்பக் கூறி அவளை மீட்டுக்கொண்டு போகாநிற்றல். அதற்குச் செய்யுள்:

ஆண்டி லெடுத்தவ ராமிவர்
     தாமவ ரல்குவர்போய்த்
தீண்டி லெடுத்தவர் தீவினை
     தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டி லெடுத்தவ ரால்தெங்கோ
     டெற்றப் பழம்விழுந்து
பாண்டி லெடுத்தபஃ றாமரை
     கீழும் பழனங்களே.

செழும்பணை யணைந்தமை அழுங்குதாய்க் குரைத்தது.

     (இ-ள்) இவர்தாம் ஆண்டு இல் எடுத்தவர் ஆம்-இம் மூதாட்டியார்தாம் நம்மெதிர் ஒரு தோன்றலோடு சென்ற நங்கையை அவள் தந்தை இல்லத்தின்கண் எடுத்து வளர்த்தவர் போலும்; தீண்டில் எடுத்துஅவர் தீவினை தீர்ப்பான் தில்லையின்வாய்-யாவராயினும் அறிந்தோ அறியாமலோ தமது சிற்றம்பலத்தை எய்தின் அவர் இருளுலகத்து அழுந்தாமல் எடுத்து அவரது தீவினையைத் தீர்ப்பவனுடைய தில்லை மூதூரின்கண்; தூண்டில் எடுத்த வரால் தெங்கொடு எற்ற- தூண்டிலால் பற்றி விரைந்து எடுத்த வரால்மீன் தென்னையின்கண் மோதுதலாலே; பழம் விழுந்து-அதன் பழங்கள் விழுந்து; பாண்டில் எடுத்த பல்தாமரை கீழும் பழனங்கள்-பொற்கிண்ணம் போலும் மலர்களை உயர்த்திய பலவாகிய தாமரையின் இலைகளைக் கிழித்தற்கிடனான பழனங்களை; அவர் போய் அல்குவர்-அக்காதலரிருவருஞ் சென்று சேர்வர்; ஆதலால் அவர்க்கு இனி இடர் ஒன்றும் இல்லை, இனி நீவிர் எம்மொடு வருதிர் என்பதாம்.