திருக்கோவையார் 292 ஆம் செய்யுள்
வெறிவிலக்கல்
அஃதாவது:
தலைவியின் வேறுபாட்டிற்குக் காரணம் தெவத்தின் குறை என்று கருதிய செவிலித்தாய் அக்குறை
தீரும் பொருட்டு வேலனை அழைத்து வெறியாடல் நிகவித்துழி, தோழி அவ்வெறியாட்டை விலக்கி
மறை வெளிப்படுத்துதற் பொருட்டு வேலனை நோக்கிக் கூறியது என்பதாம். அதற்குச் செய்யுள்:
விதியுடை யாருண்க வேரி
விலக்கலம் அம்பலத்துப்
பதியுடை யான்பரங் குன்றினிற்
பாய்புனல் யாமொழுகக்
கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க
வேறு கருதுநின்னின்
மதியுடை யார்தெய்வ மேயில்லை
கொல்இனி வையகத்தே.
|
அறத்தொடு நின்ற திறத்தினிற் பாங்கி வெறிவி லக்கிப் பிறிது ரைத்தது.
(இ-ள்) விதியுடையார்
உண்க வேரி-இவ்வெறியாட்டு விழவின்கன் கள்ளுண்ணும் உரிமையுடையோர் அதனை உண்பாராக;
விலக்கலம்-யாம் அதனை உண்ணற்க என விலக்குகின்றிலேம் அது கிடக்க; அம்பலத்துப்
பதியுடையான் பரங்குன்றினில்-திருவம்பலமாகிய இருப்பிடத்தையுடைய இறைவனுடைய திருப்பரங்குன்றினிடத்தே
யாங்கள் நீராடுங்கால்; யாம் பாய் புனல் ஒழுக-யாங்கள் பாய்கின்ற அந்நீரோடு செல்வோமாக;
கதி உடையான் கதிர்த்தோள் நிற்க-அந்நீரினில் யாம் இறந்துபடாமல் எம்மை எடுத்து
உய்யக் கோடற்பொருட்டு ஆங்கு வருதலை உடையவனான அந்த நம்பியினுடைய ஒளியுடைய தோள்களே
இவள் உற்ற நோய்க்கு மருந்தாகவும் அவற்றைக் கருதாது; வேறு கருதும் நின்னின் மதியுடையார்-இந்நோய்
தீர்த்தற்கு வேறோர் உபாயத்தைக் கருதும் நின்னைப்போல் அறிவுடையார்; தெய்வமே-எங்கடவுளே;
வையகத்து இனி இல்லைகொல்-இவ்வுலகத்து இப்பொழுது பிறர் இல்லை போலும் என்பதாம்.
(வி-ம்.) வேலன் தான்
கள்ளுண்ணலை விரும்பியே இவ்வெறியாடல் நிகழ்த்துகின்றான். உண்மை உணர்ந்தல்ல என்று
இகழ்வாள் விதியுடையோர் வேரி உண்க என்றாள். வேரி-கள். பதி-இருப்பிடம்.
|