திருக்கோவையார் 248 ஆம் செய்யுள்
உலகியல்புரைத்தல்
அஃதாவது:
மகட்போக்கிய செவிலி அவளைத் தேடிப் பாலை நிலத்தே செல்பவள் அங்கு எதிர்வருவோரை
என்மகளொருத்தியும் ஏதிலால் மகன் ஒருவனும் நும்மெதிர் செல்லக் கண்டீரோ என்று வினவா
நிற்ப, அதுகேட்ட அவர் காணேமல்லேம்; கண்டேம், சந்தனமும் முத்தும் சங்கும் தாம்
பிறந்தவிடங்களுக்கு யாதும் பயன்படாமைபோல் மகளிரும் தாம்பிறந்த விடத்துப் பயன்படார்.
அவள் தானும் சிறந்தானை வழிபட்டுச் சென்றனள். அஃதே உலகியல்பு. அறமும் அதுவே, எனக்
கூறாநிற்றல் என்பது. அதற்குச் செய்யுள்:
சுரும்பிவர் சந்துந்
தொடுகடல்
முத்தும்வெண் சங்குமெங்கும்
விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி
யாம்வியன் கங்கையென்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன்
சிற்றம் பலமனைய
கரும்பன மென்மொழி யாருமந்
நீர்மையர் காணுநர்க்கே.
செவிலியது கவலைதீர
மன்னிய உலகினன் முன்னி யுரைத்தது. |
(இ-ள்) சுரும்பு இவர்
சந்தும்-நறுமணமுண்மையால் வண்டுகள் சென்று மொய்த்தற்கு இடனான சந்தனமும்; தொடுகடல்
முத்தும்-சகரரால் தோண்டப்பட்ட கடலிற்பிறந்த முத்தும்; வெண்சங்கும்-வெள்ளிய சங்கும்;
எங்கும் விரும்பினர்பால் சென்று மெய்க்கு அணியாம்-தாம்பிறந்த இடங்களுக்குச் சிறிதும்
பயன்படாமல் எந்த நாட்டினும் தம்மை விரும்பி அணிவாரிடத்தே சென்று அவர் மெய்க்கு
அணியாகாநிற்கும்; வியன்கங்கை என்னும் பெரும்புனல் சூடும் பிரான்-அகன்ற கங்கை என்று
கூறப்படுகின்ற பெரிய வெள்ளத்தைத் திருமுடியிலே சூடாநின்ற பெருமானாகிய; சிவன் சிற்றம்பலம்
அனைய-சிவனுடைய திருச்சிற்றம்பலத்தை ஒத்த; கரும்பு அன மென் மொழியாரும்-கரும்புபோன்ற
இனிய மெல்லிய மொழியினையுடைய மகளிரும்; காணுநர்க்கு அந்நீர்மையார்-ஆராய்ந்து காண்பவர்க்கு
அத்தன்மையுடையரே ஆவார்காண் ஆதலால் நீ கவலவேண்டா என்பதாம்.
(வி-ம்.) சுரும்பு-வண்டு.
சந்து-சந்தனம். தொடுகடல். வினைத்தொகை. சகரரென்பாரால் தோண்டப்பட்ட கடல் என்க.
|