மூலமும் உரையும்181



திருக்கோவையார் 177 ஆம் செய்யுள்
தன்னுட்கையாறெய் திடுகிளவி

     அஃதாவது: தலைவனைக் காண்டற் கெழுந்த விருப்பத்தால் வருந்துகின்ற தலைவி திங்களை நோக்கித் திங்கள் தேவனே! இத்தாழையைச் சான்றாகக் கொண்டு இப்புன்னையின்கீழ் என்னைக் கஊடிய கள்வனை நீ இவிடத்தே வரக்கண்டிலையோ!; துணையில்லாத எனக்கு ஓர் ஆறுதல் மொழி கூறுவாயாக என்று தன்னுள் கையறவு கொண்டு வினவா நிற்றல். அதற்குச் செய்யுள்:-

விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண்
     டில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப்
     புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குலெல்
     லாமங்குல் வாய்விளக்கு
மண்டல மேபணி யாய்தமி
     யேற்கொரு வாசகமே.

மின்னுப் புரையும் அந்நுண் மருங்குல் தன்னுட் கையா றெய்திடு கிளவி.

     (இ-ள்) கங்குல் எல்லாம் மங்குல் வாய் விளக்கும் மண்டலமே-இரவு முழுதும் வானிடத்தை ஒளியினாலே விளக்குகின்ற திங்கள் மண்டிலமே; விண்தலை யாவர்க்கும் வேந்தர் வண்தில்லை-வானுலகத்தின்கண் வாழுகின்ற எலாத் தேவர்களுக்கும் அரசராயுள்ள இறைவருடைய வளவிய தில்லை நகர்ப் பரப்பின்கண்; மெல்லம் கழிசூழ் கண்டலையே கரியா-மெல்லிய கழி சூழ்ந்த இத்தாழையே சான்றாகக் கொண்டு; கன்னிப் புன்னைக் கலந்த கள்வர்-இளைய இப்புன்னை மரத்தின்கீழ் என்னைக் கூடிய கள்வர்; வரக்கண்டிலையே-இங்கு ஒருகால் வரக்கண்டாயில்லையோ; தமியேற்கு ஒருவாசகம் பணியாய்- துணையில்லாத எனக்கு ஓர் ஆறுதல் மொழி கூறுவாயாக என்பதாம்.

     (வி-ம்.) விண்டலை-விண்ணிடத்தே. வேந்தர்-இறைவர். மெல்லங்கழி என்பது ஒரு பண்புத்தொகை முடிவு. கரியாகக்கொண்டு என ஒருசொல் வருவித்துக் கொள்க. இனி ஐகாரத்தை அசை நிலையாக்கினுமாம். எப்பொழுதும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் என்பாள் கள்வர் என்றாள். கள்வர்க் கண்டிலையே என்பதும் பாடம். இதற்குக் கள்வரைக் கண்டிலையே என்க. கங்குலெல்லாம் கண்டிலையே என்று கூட்டியுரைப்பினும் அமையும். இனி ஒருவாசகம் பணியாய் என்பதற்கு ஒரு சொல்