திருகோவையார் 148 ஆம் செய்யுள்
இரவுக்குறி வேண்டல்
அஃதாவது:
தினைக்கதிர் அரிந்துவிட்டமையால் தலைவியும் தோழியும் காவலொழிந்து இல்லம் புக்கனராக;
அதனால் தலைவியைக் கண்டு அளவளாவுதல் இயலாதாக வருந்திய தலைவன் தோழியைக் கண்டு
இரவுக்குறி வேண்டுவான். இவற்றை இரவிற்கு யான் நும்மூர்க்கு விருந்தினன் ஆயினேன்.
ஆதலின், என்னை ஏற்றுக்கொள்வாயாக என்று இரவுக்குறி வேண்டுதல் என்பதாம். அதற்குச்
செய்யுள்:-
மருந்துநம் மல்லற்
பிறவிப்
பிணிக்கம் பலத்தமிர்தாய்
இருந்தனர் குன்றினின் றேங்கு
மருவிசென் றேர்திகழப்
பொருந்தின மேகம் புதைந்திரு
டூங்கும் புனையிறும்பின்
விருந்தினன் யானுங்கள் சீறா
ரதனுக்கு வெள்வளையே.
|
நள்ளிருட் குறியை வள்ளல் நினைந்து வீங்கு மென்முலைப் பாங்கிக் குரைத்து.
(இ-ள்)
வெள்வளை-வெள்ளிய வளியினையுடையோய்; நம் அல்லற் பிறவிப்பிணிக்கு மருந்து-நம்முடைய
துன்பந்தரும் பிறப்பாகிய பிணிக்கு அருந்தும் மருந்தாயிருந்தும்; அம்பலத்து அமிர்தாய்
இருந்தனர்-திருச்சிற்றம்பலத்தின்கண் காண்போர்க்குச் சுவையால் அமிர்தமாயிருந்தவரது;
குன்றினின்று ஏங்கும் அருவி சென்று ஏர் திகழ் மேகம் பொருந்தின-மலையினின்றும் ஒலிக்கும்
அருவிகள் வீழ்ந்து அழகு விளங்கும்படி முகில்கள் வந்து பொருந்தின; புதைந்து இருள்தூங்கும்
புனை இறும்பின் உங்கள் சீறூரதனுக்கு யான் விருந்தினன்-ஆதலால் அம்முகிலின்கண் மறைந்து
ருல் செறியும் செய்காட்டையுடைய நும்முடைய சிறிய ஊருக்கு யான் இன்றிரவு விருந்தினன்
ஆகிவிட்டேன்; ஆதலின், என்னை ஏற்றுக்கொள்வாயாக என்பதாம்.
(வி-ம்.)
மருந்து உண்பார்க்கு வெறுப்புத் தருவதுபோல நமக்கு நுகர்ச்சியின்கண் வெருக்கத்தகுந்த
துன்பங்களையும் தந்து நன்னெறிக்கட் செலுத்துதலான் அல்லற் பிறவி மருந்து என்றார்.
தன்னை உணர்ந்து வழிபடும் அடியவர்க்கு நினையுந்தோறும் அமிழ்தம் போன்று சுவைதந்து
நிற்றலின் அம்பலத்து அமிர்தமாய் இருந்தனர் என்றார். மருந்துபோல வெறுப்பன செய்தும்
உயிர்களை இறைவன் திருத்துவன் என்பதனை,
|