270கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 342 ஆம் செய்யுள்
நெஞ்சொடுநோதல்

     அஃதாவது: பொருள்வயிற் பிறிந்த தலைவன் மீள நினைந்துழிப் பின்னரும் பொருண்மேற் செல்லுகின்ற தன்நெஞ்சினைக் கடிந்து வருத்திக் கூறாநிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள்-

பொன்னணி யீட்டிய வோட்டரு
     நெஞ்சமிப் பொங்குவெங்கா
னின்னணி நிற்குமி தென்னென்ப
     தேயிமை யோரிறைஞ்சு
மன்னணி தில்லை வளநக
     ரன்னவன் னந்நடையாண்
மின்னணி நுண்ணிடைக் கோபொருட்
     கோநீ விரைகின்றதே.

வல்லழற் கடத்து மெல்லியலை நினைந்து வெஞ்சுடர் வேலோன் நெஞ்சொடு நொந்தது.

     (இ-ள்) பொன்அணி ஈட்டிய ஒட்டரும் நெஞ்சம்-பொன்திறள்களை இன்னும் இறப்ப ஈட்டும் பொருட்டு ஓடுதலுற்ற என் நெஞ்சமே; நீ விரைகின்றது-இப்பொழுது நீ இவ்வாறு விதுப்புறுவது; இமையோர் இறைஞ்சும் மன் இணிதில்லை வளநகர் அன்ன-வானோர் சென்று வணங்கும் சிறப்பினையுடைய இறைவனுடைய அழகிய தில்லை என்னும் வளவிய நகரத்தை ஒக்கும்; அன்ன்ம நடையாள் மின் அணி நுண் இடைக்கோ-அன்னத்தின் நடைபோலும் நடையையுடைய நந்தலைவியினது மின்னல் போலும் நுண்ணிய இடையின் பொருட்டோ அல்லது; பொருட்கோ-யாம் மேற்கொண்டுள்ள பொருளீட்டுதற் பொருட்டோ அன்றி அவ்விரண்டற்குமல்லாது பிறவற்றிற்கோ; இப்பொங்குவெங்கானின் நணி நிற்கும் இது என் என்பது-இந்த அழல்பொங்க நின்ற வெவ்விய காட்டைச் சேர்ந்து போவதும் செய்யாது மீள்வதும் செய்யாது இங்ஙனம் நிற்கின்ற இச்செயல் யாதென்று சொல்லப்படும் என்பதாம்.

     (வி-ம்.) பொன்னும் அணியும் ஈட்டிய எனினுமாம். ஈட்டிய-செய்யிய என்னும் வினையெச்சம். ஓட்டருதல்-ஓடுதல். இனி ஓட்டந்தரும் என்னும் சொல் இடைகுறைந்து நின்றது எனினுமாம். நண்ணி எனற்பாலது நணிஎன இடைகுறைந்து நின்றது. மன்: இறைவன். தில்லைநகர் ஐம்புல வின்பங்களையும் எஞ்சாது தருதல்போல ஐம்புலவின்பமும் தருவா என்பான், நகரன்ன நடையாள் என்றான். தன் விருப்பம் மீள்வதே என்பான் நகரன்ன மின்னணி நுண்ணிடையாள் எனத் தலைவியை விதந்தான். பொருட்கோ என்புழி இகழ்ச்சி தோன்றுதலுணர்க. மெய்ப்பாடு-அச்சம்: பயன்-செலவழுங்குவித்தல்.