திருக்கோவையார் 74 ஆம் செய்யுள்
உலகின்மேல் வைத்துரைத்தல்
அஃதாவது:
தோழிபால் குறையுறும் தலைவன் அவள் தன் குறை முடியாமை கண்டு இனி யான் மடலூர்ந்தேனும்
அவளை எய்துவேன் எனத் தோழிக்குணர்த்துபவன் மடலூரிந் தன் கருத்தினை உலகின்மேல்
வைத்துக் கூறுதல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:
காய்ச்சின வேலன்ன
மின்னியல்
கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந்
தார்வியன் றென்புலியூர்
ஈசன சாந்து மெருக்கு
மணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்சின மாவென வேறுவர்
சீறூர்ப் பனைமடலே.
|
புலவே லண்ணல் புனை மடலேற் றுலகின் மேல்வைத் துய்த்து ரைத்தது.
(இ-ள்)
காய்சினவேல் அன்ன மின்இயல் கண்ணின்வலை-சுடுகின்ற வெகுளியையுடைய வேலினை ஒத்த ஒளிவீசும்
கண்ணாகிய வலையை; கலந்து வீசினபொது-மகளிர் காமக் குணத்தினைக் கலந்துவிசிய காலத்தே;
உள்ளம் மீன் இழந்தார்-அவ்வலையிலே அகப்படுதலாலே தம் ந்வ்ஞ்சமாகிய மீனை இழந்துவிட்ட
ஆடவர்; வியன் தென்புலியூர் ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து-அகன்ற தென்புலியூரின்கண்
எழுந்தருளியுள்ள சிவபெருமானுடைய திருநீற்றையும் எருக்கம்பூ மாலையினையும் அணிந்துகொண்டு;
ஓர் கிழிபிடித்து-அம்மகளிர் உருவம் வரையப்பட்ட ஒரு கிழியைக் கையிலே பிடித்துக்கொண்டு;
பனை மடல் பாய்சின மாஎன சீறூர் ஏறுவார்-பனைமடலால் பாயவல்ல சினத்தையுடைய குதிரைபோலச்
செய்து அதன்மேல் சிற்றூரின்கண் ஏறாநிற்பர் காண்; அஃதெப்பொழுதெனின் அவ்வாடவர்
தம் நெஞ்சாகிய அம்மீனைப் பெறுதற்கு வேறு வழி இல்லாதவிடத்தே என்பதாம்.
(வி-ம்.)
காய்சினவேல் என்பது உடையார் பண்பினை உடைமைமேல் வைத்து ஓதப்பட்டது. கண்ணின் வலை
என்புழி இன் அல்வழிவந்த சாரியை. கண்ணென் வலை என்பதூஉம் பாடம். மகளிர் என ஒருசொல்
வருவியாது கண்ணையே கருத்தாவாகக் கூறினுமாம். அஃதாவது கண்ணானது வலையை வீசினபோது எனக்
கூறினுமாம்
|