மூலமும் உரையும்287



திருக்கோவையார் 172 ஆம் செய்யுள்
அல்லகுறியறிவித்தல்

     அஃதாவது: இரவுக் குறிக்கண் அல்ல குறிப்பட்டுத் தலைவியும் தோழியும் மீண்ட செய்தியை மறுநாள் தலைவன் சிறைப்புறத்தே வந்து நிற்புழி அவனுக்கு அறிவித்தற்பொருட்டு, அவன் கேட்பத் தோழி தலைவிக்குக் கூறுவாள் போன்று அக்குற்றத்தினை அன்னப் பறவையின் மேல் ஏற்றிக் கூறியது என்பதாம். அதற்குச் செய்யுள்:-

மின்னங் கலருஞ் சடைமுடி
     யோன்வியன் றில்லையன்னாய்
என்னங் கலமர லெய்திய
     தோவெழின் முத்தந்தொத்திப்
பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின்
     வாய்ப்புலம் புற்றுமுற்றும்
அன்னம் புலரு மளவுந்
     துயிலா தழுங்கினவே.

வல்லி யன்னவ ளல்ல குறிப்பாடு அறைப்புனற் றுறைவற்குச் சிறைப்புறத் துரைத்தது.

     (இ-ள்) மின் அங்கு அலரும் சடைமுடியோன் வியன் தில்லை அன்னாய்-ஒளியானது அவ்விடத்தே விரிதற்குக் காரணமான சடையால் இயன்ற திருமுடியினையுடைய கூத்தப் பெருமானது அகன்ற தில்லை நகரத்தை ஒத்த எம்பெருமாட்டியே! கேள்; எழில் முத்தம் தொத்தி-அழகைஒயுடைய அரும்பாகிய முத்துக்கள் தொத்தப்பெற்று; அங்கு பொன் அலர் புன்னைச் சேக்கையின் வாய்-அவ்விடமெல்லாம் பொன்னைப்போன்று நிறமுள்ள தாதுக்களை மலரும் புன்னை மரத்தில் இற்றப்பட்ட தம்முடைய கூட்டின்கண்ணே வதியும்; அன்னம் முற்றும் புலம்புற்றுப் புலரும் அளவுந் துயிலாது அழுங்கின-அன்னப் பறவைகளெல்லாம் துன்புற்று விடியுமளவும் உறங்காமல் ஆரவாரித்தன; அங்கு எய்தியது அலமரல் என்-அவ்விடத்தே அவற்றிற்கு எய்தியதாகிய துன்பந்தான் யாதோ யான் அறிகின்றிலேன் என்பதாம்.

     (வி-ம்.) மின்னங்கலரும் என்பதற்கு மின் அவ்விடத்தே அலர்ந்தாற்போலும் சடையெனினுமமையும். என்னங் கலமரலெய்தியதோ என்பதற்கு என்ன அலமரல் ஆண்டு எய்திற்றோ என்று கூட்டியுரைப்பினுமமையும். இப்பொருட்கு என்ன என்பது கடைக்குறைந்து நின்றது. சேக்கையின்வாய் அழுங்கின என்க. நெடும்பொழுது துயின்றிலவென்பாள் புலருமளவும் என்றாள். அழுங்கல்