|  
        திருக்கோவையார் 208 ஆம் செய்யுள் நாணிழந்து வருந்துதல்
      அஃதாவது: 
        தலைவியைத் தலைவனுடன் போக்குதற்குத் தோழி அவளை உடம்படுத்துங்கால் உடம்போக்கிற்கு 
        ஒருப்பட்ட தலைவி கற்புக் காரணமாகத் தனது நாண் அழிந்தமைகண்டு அதனைப் பிரிதல் ஆற்றாது 
        வருந்தியது என்பதாம். அதற்குச் செய்யுள்:-  
        
          | மற்பாய் விடையோன் 
            மகிழ்புலி யூரென் னொடும்வளர்ந்த
 பொற்பார் திருநாண் பொருப்பர்
 விருப்புப் புகுந்துநுந்தக்
 கற்பார் கடுங்கால் கலக்கிப்
 பறித்தெறி யக்கழிக
 விற்பாற் பிறவற்க வேழையர்
 வாழி யெழுமையுமே.
 |   கற்பு நாணினு முற்சிறந் தமையிற் சேண்நெறி செல்ல வாணுதல் துணிந்தது.      (இ-ள்) 
        மல்பாய்விடையோன் மகிழ் புலியூர்-வளத்தையுடைய பாயும் விடையையுடைய இறைவன் விரும்புதற்கிடனான 
        புலியூரின்கண்; என்னொடும் வளர்ந்த பொற்பு ஆர் திருநாண்-என்னோடே பிறந்து யான் 
        வளரத் தானும் வளர்ந்த பொலிவார்ந்த சிறப்பினையுடைய எனது நாணம்; பொருப்பர் விருப்புப் 
        புகுந்து நுந்த-மலைநாட்டினையுடைய எம்பெருமான்பால் யான் கொண்டுள்ள விருப்பம் என்னுட் 
        புகுந்து தள்ளுதலாலே தான் நிற்கும் நிலைகுலைந்து; கற்பு ஆர் கடுங்கால் கலக்கிப் பறித்து 
        எறிய-எனது கற்பு என்னும் நிறைந்த கடிய காற்றுக் கலக்கிப் பிடுங்கி என்னிடத்தே கிடவாமல் 
        புறத்தே எறிதலாலே; கழிக-அஃது இனி என்னை நீங்குவதாக; ஏழையர் எழுமையும் இல்பால் 
        பிறவற்க-இங்ஙனமாதலின் இனி மகளிர் எழுபிறப்பினும் உயர்குடியின்கண் பிறவாதொழிக 
        என்பதாம்.       (வி-ம்.) 
        மல்-மல்லல் என்பது கடை குறைந்து நின்றது, மல்லல்-வளம். மல்லல் புலியூர் விடையோன் 
        மகிழ்புலியூர் எனத் தனித்தனி சென்றியையும். பாய்விடை: வினைத்தொகை. மகிழ்புலியூரும் 
        அது. என்னொடும் வளர்ந்த நாண் என்பதுபட நின்றது. இதனோடு நாணோடுடன் பிறந்த நான் 
        எனவரும் முத்தொள்ளாயிரமும் நினைக. (98) பொற்பு-பொலிவு. திரு-ஈண்டுச் சிறப்பு என்பதுபட 
        நின்றது.மகளிர்க்குச் செல்வமாகிய நாண் எனினுமாம். பொருப்பர் என்றது தலைவனை. கால்-காற்று. 
        நாண் கழிக என இயையும். இல்-உயர்குடி.  |