மூலமும் உரையும்301



திருக்கோவையார் 376 ஆம் செய்யுள்
தோழியியற்பழித்தல்

     அஃதாவது: தலைவனுடைய பிறிவாற்றாமையால் வருந்தும் தலைவியை ஓருபாயத்தால் ஆற்றுதற்கெண்ணிய தோழி தலைவிகேட்பத் தலைவனைப் பழித்துக் கூறியது என்பதாம். அதற்குச் செய்யுள்:-

திக்கி னிலங்குதிண் டோளிறை
     தில்லைச்சிற் றம்பலத்துக்
கொக்கி னிறக தணிந்துநின்
     றாடிதென் கூடலன்ன
வக்கின் நகையிவ ணைய
     வயல்வயி னல்குதலாற்
றக்கின் றிருந்தில னின்றசெவ்
     வேலெந் தனிவள்ளலே.

தலைமகனைத் தகவிலனெனச் சிலைநுதற்பாங்கி தீங்கு செப்பியது.

     (இ-ள்) திக்கின் இலங்கு திண் தோள் இறை-எட்டுத் திக்குகளினும் சுடர்வீசி விளங்கா நின்ற திண்ணியேட்டுத் திருத்தோள்களையுடைய இறைவனும்; தில்லைச் சிற்றம்பலத்துக் கொக்கின் இறகு அது அணிந்து நின்று ஆடி-தில்லை நகரத்திலே திருச்சிற்றம்பலத்தின்கண்ணே கொக்கினது இறகினை அணிந்துகொண்டு நின்று இன்பக் கூத்தாடுபவனும் ஆகிய சிவபெருமானுடைய; தென்கூடல் அன்ன-தெற்கின்கண் உண்டாகிய மதுரை மாநகரத்தை ஒக்கும் சிறப்புடைய; அக்கு இன் நகை இவள் நைய-சங்குமணி போன்ற காண்டற்கினிய பல்லொழுங்கினையுடைய எம்பெருமாட்டி இங்ஙனம் பிரிவாற்றாமையால் வருந்தும்படிவிட்டு; அயல்வயின் நல்குதலால்-ஏதிலாராகிய பரத்தையரிடத்து அருள் செய்தலாலே; நின்ற செவ்வேல் எம்தனி வள்ளல்-எல்லோராலும் புகழப்பட்டு நின்ற சிவந்த வேலையுடைய ஒப்பில்லாத வள்ளலாகிய என்பெருமான்; இன்று தக்கு இருந்திலன்-இற்றை நாள் தன் பெருந்தகைமைக் கேற்ப ஒழுகுவானிலன். யாம் என் செய்தும் என்பதாம்.

     (வி-ம்.) திக்கின் என்பது எண்டிக்கினும் என்பது படவும், தோள் என்பது எண்டோள் என்பது படவும் நின்றன. எண்டோள் விசி நின்று ஆடும் பிரான்” என்றருளினார் அப்பரடிகளாரும். இறைவனும் ஆடிய ஆகிய சிவபெருமான் என்க. இறகது என்புழி அது பகுதிப் பொருள் விகுதி. அக்கு-சங்குமணி. நகை-பல். இவள்: முன்னிலைப் பன்மொழி. மெய்ப்பாடு-அழுகை. பயன்-தலைவியை ஆற்றுவித்தல்.