மூலமும் உரையும்31



திருக்கோவையார் 256-ஆம் செய்யுள்
தாயறிவு கூறல்

     அஃதாவது: இரவுக்குறி மறுத்துத் தோழி வரைவு கடாவவும் தலைவன் களவின்பமே காமுற்று வரைதலில் கருர்த்தின்றிப் பின்னும் குறியிடைச் சென்று நிற்ப, அதுகண்ட தோழி பின்னும் தலைவனை அச்சுறுத்தி வரைவு கடாஅதற் பொருட்டு அவன் வரவுணராதாள் போன்று அபன் கேட்பத் தலைவியை நோக்கி ‘மயில்போல்வாய்! நம் அன்னை பண்டு போலாது என்னைச் சினந்து நோக்கினள்; எனவே இக்களவொழுக்கத்தை அவள் அறிந்தாள் போலும்’ என்று கூறித் தலைவனுக்கு இச்செய்தியை அறிவுறுத்தியது. அதற்குச் செய்யுள்:-

விண்ணுஞ் செலவறி யாவெறி
     யார்கழல் வீழ்சடைத்தீ
வண்ணன் சிவன்தில்லை மல்லெழிற்
     கானல ரையிரவில்
அண்ணல் மணிநெடுந் தேர்வந்த
     துண்டா மெனச்சிறிது
கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையும்
     நோக்கினள் கார்மயிலே.

சிறைப்பு றத்துச் செம்மல் கேட்ப வெறிக்குழற் பாங்கி மெல்லியற் குரைத்தது.

     (இ-ள்) கார்மயிலே-கார்காலத்தே களித்தாடும் மயிலை யொப்பாய்; விண்ணும் செலவு அறியா-தேவர்களானும் எல்லாப் பொருளையுங் கடந்து அப்பாலுக்கப்பாலாய்ச் சென்ற தன்செலவை அறியப்படாத; வெறிஆர் கழல்வீழ் சடைத்தீ வண்ணன்-மணம்பொருந்திய வீரக்கழலணிந்த திருவடிகளையும் தாழ்ந்த சடையினையுமுடைய தீவண்ணனாகிய; சிவன்-சிவபெருமானுடைய; தில்லை மல் எழில் கானல்-தில்லையின்கண் வளப்பமான அழகையுடைய கடற்கானற் சோலையிலே; அரை இரவின் மணி அண்ணல் நெடுந்தேர் வந்தது உண்டாம் என- நள்ளிரவின்கண் மணிகளிழைத்த தலைமைத் தன்மையை யுடையதொரு நெடிய தேர் வந்ததுண்டு என (அதன் சுவடுண்மையின்) உட்கொண்டு, அன்னை-நந்தாய்; சிறிது கண்ணும் சிவந்து-பண்டு போலன்றிச் சினத்தால் சிறிது கண் சிவந்து; என்னையும் நோக்கினாள்-நின்னை நோக்கியதோடமையாது என்னையும் பார்த்தனள்; எனவே இக்களவொழுக்கத்தினை அவள் அறிந்தாளாதல் வேண்டும்; எ-று.

     (வி-ம்.) அன்பர் இட்ட மலரையுடையது என்ற கருத்துத் தோன்ற “வெறியார்கழல்” என்றார். மெய்ப்பாடு பெருமிதம். பயன் வரைவுகடாதல்.