திருக்கோவையார் 275 ஆம் செய்யுள்
வழியொழுகி வற்புறுத்தல்
அஃதாவது:-
தலிவியினது பிரிவாற்றாமைப் பெருந்துயர் கண்ட தோழி அவளோடு தானும் வருந்துவாள்போல்
நடித்துப் பின்னர் அவளைத் தன் சொற் கேட்கும் செவ்வியுடையவளாக்கி நீ இங்ஙனம்
வருந்தின் ஏதிலார் அலர் தூற்றுவர். ஆதலின் நீ ஆற்றியிருத்தல் வேண்டும் என்று அவளை
வற்புறுத்திக் கூறியது என்பதாம். அதற்குச் செய்யுள்:
மதுமலர்ச்
சோலையும் வாய்மையும்
அன்பும் மருவிவெங்கான்
கதுமெனப் போக்கும் நிதியின்
அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை
யோன்தில்லை நோகமலர்போல்
இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த
வாறென்ப ரேந்திழையே.
|
சூழிருங் கூந்தலைத் தோழி தெருட்டியது.
(இ-ள்) மதுமலர்ச் சோலையும்-நம் பெருமானை நீ முதன் முதலாகக் கண்ணுற்ற தேன் பொதுளிய
சோலையும்; வாய்மையும்-அற்றை நாள் அப்பெருமகன் நின்னிற்பிரியேன் பிரியின் ஆற்றேன்
என்று கூறிய வஞ்சினத்தினது வாய்மைத் தன்மையையும்; அன்பு-ஒருகாலைக் கொருகால் பெருகிய
அவனது அன்பின் தன்மையையும்; மருவிவெம்கான் கதும் எனப் போக்கும்-நம்மோடு கூடி அளவளாவிப்
பின்னர் ஞெரேலென் வெவ்விய காட்டிற் சென்ற செலவையும்; நிதியின் அருக்கும்-அவன்
போய் ஈட்டும் பொருளினது அருமையையும்; முன்னிக் கலுழ்ந்தால்-நினைந்துஇங்ஙனம் அழுதால்;
ஏந்திழை-உயர்ந்த அணிகளன்கலையுடைய நங்காய்; ஏதிலார்-நின்னைக்காணும் அயலோர்;
மலர்ப் பாவைக்கு-தாமரை மலரிலுறையும் திருமகளை ஒத்த இப்பெருமகளுக்கு; நோக்கம் ஓர்
மூன்று உடையோன் தில்லை நோக்கலர் போல்-திருக்கண்கள் ஒரு மூன்று உடைய அம்பலவாணனது
திருத்தில்லையைக் கண்டு வணங்காதவர் வருந்துமாறு போலே, வருந்துதற்கு; வந்த ஆறு என்னோ
என்பர்-வந்த வழி யாதோ என்று ஆராய்ந்து அலர் துற்றா நிற்பர்; ஆதலால் நீ ஆற்றி
இருத்தல் வேண்டும் என்பதாம்.
|