திருக்கோவையார் 348 ஆம் செய்யுள்
முகிலொடு கூறல்
அஃதாவது:
கார்ப்பருவத் தொடக்கத்தில் ஒருதலையாக மீண்டுவருவேன் என்று தலைவிக்குக் கூறிச்சென்ற
தலைவன் அப்பருவம் வந்தவுடன் தலைவியை நினைந்து விரைவொடு மீண்டு வருபவன் விசும்பின்
கண் விரைந்தியங்கும் முகிலைநோக்கி முகிலே! நீ இவ்விடத்தெல்லாம் எனக்கு முற்பட்டுச்
சென்றாயேனும் அவள் உறையும் நெடிய மாளிகைக்கு மட்டும் எனக்கு முற்படச் செல்லாதொழிவாயாக!
என்று கூறாநிற்றல் என்பதாம். அதற்குச் செய்யுள்:-
அற்படு காட்டினின் றாடிசிற்
றம்பலத் தான்மிடற்றின்
முற்படு நீண்முகி லென்னின்முன்
னேன்முது வோர்குழுமி
விற்படு வாணுத லாள்செல்ல
றீர்ப்பான் விரைமலர்தூய்
நெற்படு வான்பலி செய்தய
ராநிற்கும் நீள்நகர்க்கே.
|
"எனைப்பல துயரமோ டேகா நின்றவன் துனைக்கா ரதற்குத் துணிந்துசொல் லியது"
(இ-ள்)
அல்படு காட்டில் நின்று ஆடி-மாலைக்காலத்தே இருள் உண்டாகாநின்ற புறங்காட்டின்கண்
நின்று கூத்தாடு பவனாகிய; சிற்றம்பலத்தான் - தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்
கண் எழுந்தருளிய சிவபெருமானுடைய; மிடற்றின் முன்படு நீள்முகில் - மிடறுபோல இருண்டு
எனக்கு முற்பட்டு ஓடுகின்ற முகிலே! இதுகேள்; முதுவோர் குழுமி - இவ்விடத்தெல்லாம் நீ
முற்பட்டுச் சென்றாயேனும் முதுபெண்டிர் திரண்டு; வில்படுவாள் நுதலாள் செல்லல் தீர்ப்பான்
- வில்லும் அழகால் தாழுகின்ற ஒளியுடைய நெற்றியினையுடைய எங் காதலியின் பிரிவுத்
துன்பத்தைத் தணிக்கும் பொருட்டு; விரை மலர் தூய் - நறுமணமுடைய மலர்களைத் தூவி; நெல்படு
வான்பலி செய்து அயராநிற்கும் நீள் நகர்க்கு - நெல்விரவிய தூய பலியைக் கொடுத்து
இல்லுறை கடவுளுக்கு வழிபாடு செய்யாநிற்கும் எனது பெரிய இல்லத்திற்கு; என்னின் முன்னேல்
-எனக்கு முற்படச் சொல்லாதொழிக! செல்லி ஒரோவழி அவள் இறந்துபடினும் படுவாள் என்பதாம்.
(வி-ம்.)
அல் - இரவு, படுகாடு என்றது சடுகாட்டினை. ஆடி: பெயர். ஆடியாகிய சிற்றம்பலத்தான் என்க.
மிடறுபோல இருண்டு
|