திருக்கோவையார் 84 ஆம் செய்யுள்
விரவிக்கூறல்
அஃதாவது;
தலைவன் வேண்டுகோட்கிணங்கித் தலைவிபாற் சென்று குறையிரக்குந் தோழி வன்மொழியாற்
கூறின், அவள் மனம் மெலிவாள் என்றஞ்சி உரு நண்டு தன்பெடைக்கு நாவற்கனியை நல்கக்
கண்டு ஒரு பெருந்தகையோன் பேய்கண்டாற் போல நின்றான். அந்நிலையினை நீ கண்டாயாயின்
ஆற்றாய். யான் வன்கண்மையேனாதலான் ஒருவாறு ஆற்றியிருக்கின்றேன் என மென்மொழியோடு
சிறிது வன் மொழியும் விரவிக் கூறாநிற்றல் என்பதாம். அதற்குச் செய்யுள்-
நீகண்ட டனையெனின்
வாழலை
நேரிழை யம்பலத்தான்
சேய்கண் டனையன்சென் றாங்கோ
ரலவன்றன் சீர்ப்பெடையின்
வாய்வண் டனையதொர் நாவற்
கனிநனி நல்கக்கண்டு
பேய்கண் டனையதொன் றாகிநின்
றானப் பெருந்தகையே.
|
வன்மொழி யின்மனம் மெலிவ தஞ்சி மென்மொழி விரவி மிகுத்து ரைத்தது.
(இ-ள்)
நேர் இழை - நேரிய அணிகலன்களையுடையோய்; அம்பலத்தான் சேய்கண்டு அனையன் - தில்லைத்திருச்
சிற்றம்பலத்தே எழுந்தருளியுள்ள சிவபெருமானுடைய மகனாகிய முருகனைக் கண்டாற் போன்றிருக்கும்
ஒருவன்; ஆங்கு ஒரு அலவன் தன் சீர்ப்பெடையின் வாய் வண்டு அனையது ஓர் நாவல்கனி சென்று
நனி நல்கக் கண்டு - அவ்விடத்தே ஒரு நண்டு தனது அழகையுடைய பெடையின் வாயின்கண் கருவண்டு
போல்வதொரு நாவற்கனியைச் சென்று மிகவும் கொடுப்ப அதனைக் கண்டு; அப்பெருந்தகை
பேய் கண்டு அனையது ஒன்று ஆகி நின்றான்- அப்பெருந்தகையோன் பேயால் காணப்பட்டாற்
போல்வதொரு வேறுபாட்டையுடையனாகி நின்றான்; நீ கண்டனை எனின் வாழலை - அந் நிலையை
நீ கண்டாயாயின் உயிர் வாழமாட்டாய்; யான் வன்கண்மை யேனாதலின் அதனைக் கண்டு
வைத்தும் ஆற்றியுளேனாயினேன் என்பதாம்.
(வி-ம்.)
யான் வன்கண்மையேனாதலின் அதனைக் கண்டு வைத்தும் ஆற்றியுளேனாயினேன் என்பது குறிப்பெச்சம்.
வாழலை
|