திருக்கோவையார் 312 ஆம் செய்யுள்
காவற்பிரிவறிவித்தல்
அஃதாவது:
நாடு காவற்பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லக் கருதியதனைக் குறிப்பாலுணர்ந்த
தோழி அவன் கருத்தினைத் தலைவிக்குக் கூறியது என்பதாம். அதற்குச் செய்யுள்:-
மூப்பா னிளையவன்
முன்னவன்
பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்றில்லை யானரு
ளால்விரி நீருலகங்
காப்பான் பிரியக் கருதுகின்
றார்நமர் கார்க்கயற்கட்
பூப்பா னலமொளி ரும்புரி
தாழ்குழற் பூங்கொடியே.
|
"இருநிலங் காவற் கேகுவர் நமரெனப் பொருசுடர் வேலோன் கோக்கறி வித்தது"
(இ-ள்)
கார்க்கயல் கண் பூப்பால் நலம் ஒளிரும் புரி தாழ்குழல் பூங்கொடி - கரிய கயல்மீன்
போலும் கண்ணினையும் நறுமலரின் கண்ணுண்டான மணத்தின் நன்மை விளங்கும் சுருண்டு தாழ்ந்த
கூந்தலையுமுடைய பூங்கொடியையொத்த பெருமாட்டியே கேள்; மூப்பான் - உலகினைப் படைத்தற்கு
முன்னே தன் விருப்பப்படி மேற்கொண்ட அருள் திருமேனியையுடையனாதலின் எல்லோர்க்கும்
இளையவனும்; முன்னவன்- உலகத்திற்கு முன்னுள்ளோனும்; பின்னவன் - உலகமெல்லாம் அழிந்தொழியும்
ஊழிக்குப் பின்னும் இருப்பவனும்; முப்புரங்கள் வீப்பான் - மூன்று புரங்களையும் அழிப்பவனும்;
வியன்தில்லையான் - அடியார் பொருட்டு அகன்ற தில்லைச் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருப்பவனும்
ஆகிய சிவபெருமானுடைய; அருளால்- திருவருளை முன்னிட்டு; நமர் விரி நீர்உலகம் காப்பான்
- நபெருமான் வாழா நின்ற விரிந்த நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தைப் பாதுகாத்தற்
பொருட்டு; பிரியக் கருதுகின்றார் - நம்மைப் பிரிந்துசெல்ல நினைக்கின்றார் என்பதாம்.
(வி-ம்.)
மூப்பானும், இளையவனும், முன்னவனும், பின்னவனும், வீப்பானும் ஆகிய தில்லையான் என்க.
அவன் அருளால் பிரிதலாவது இறைவனால் அருளப்பட்ட அறநூல் விதிகருதிப் பிரிதல்.
|