மூலமும் உரையும்407



திருக்கோவையார் 351 ஆம் செய்யுள்
உண்மகிழ்ந்துரைத்தல்

     அஃதாவது: தலைவியைப் பிரிந்து சென்று வேண்டியாங்கு பொருள் ஈட்டிக்கொண்டு இளைஞர் எதிர்கொள்ள மீண்டுவந்து புகுந்த தலைவன் தலைவியுடன் பள்ளியிடத்தனாயிருந்து அயாவுயிர்ப்பவன் பொருள்தேடும் பொருட்டு இவளைப் பிரிந்து யான் வெவ்விய பாலை நிலத்திற்சென்ற துயரமெல்லாம் இவள் கொங்கைகள் என் மார்பிடை மூழ்கும்படி இவளைத் தழுவியவுடன் ஒழிந்தன என்று தன்னுள்ளே மகிழ்ந்து கூறியது. அதற்குச் செய்யுள்:-

மயின்மன்னு சாயலிம் மானைப்
     பிரிந்து பொருள்வளர்ப்பான்
வெயின்மன்னு வெஞ்சுரஞ் சென்றதெல்
     லாம்விடை யோன்புலியூர்க்
குயின்மன்னு சொல்லிமென் கொங்கையென்
     னங்கத் திடைக்குளிப்பத்
துயின்மன்னு பூவணை மேலணை
     யாமுன் றுவளுற்றதே.

"பொருந்தி யோடு திருமனை புகுந்தவன் வளமனைக் கிழத்தியோ டுளமகிழ்ந் துரைத்தது"

     (இ-ள்) மயில் சாயல் மன்னு இம்மானைப் பிரிந்து - மயிலினது மென்மை நிலைபெற்ற மான்போல்வாளாகிய இவளைப் பிரிந்து; பொருள் வளர்ப்பான் வெயில்மன்னு வெஞ்சுரம் சென்றது எல்லாம் - பொருளையீட்டிப் பொருக்குதற் பொருட்டு வெயில் நிலை பெற்ற வெவ்விய பாலை நிலத்தைச் சென்ற துன்ப மெல்லாம்; விடையோன் புலியூர் குயில் மன்னு சொல்லி - காளையூர்தியை யுடையவனது புலியூரின்கண் உளவாகிய குயில் ஓசை போலும் சொல்லை யுடையாளுடைய; மெல் கொங்கை என் அங்கத்திடைக் குளிப்ப - மெல்லிய முலைகள் என் உறுப்புக்களடை மூழ்கும்படி; துயில் மன்னு பூஅணை மேல் அணையாமுன் துவளுற்றுது - துயில் நிலைபெறுதலையுடைய மலரணையிடத்தே அணைவதன் முன்னம் ஒழிந்தது என்பதாம்.

     (வி-ம்.) மயில் சாயல் மன்னும் என மாறுக. மன்னுதல் - நிலை பெறுதல். இம்மானை என்பது பிரிதற்கரிய இவளை என்பதுபட நின்றது. வளர்ப்பான்: வினையெச்சம். சுரஞ்சென்றதனால் உண்டான துன்பமெல்லாம் என்க. விடை- காளை. புலயூர் - தில்லை. குயில் மன்னும் என்புழிக் குயிலோசையின் இனிமை நிலைபெற்ற என்க. சொல்லி - சொல்லையுடையாள். அங்கம் - மார்பு தோள் முதலியன