412கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 391 ஆம் செய்யுள்
புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல்

     அஃதாவது: தலைவன் பரத்தை ஒருத்தியைப் பலருமறியப் புனலாட்டுவித்தனன். அச்செய்தியை யுணர்ந்த தலைவி அத்தலைவன் இல்லிற்கு வந்துழி அச்செய்தியை அவனுக்கு எடுத்துக்கூறி ஊடுவாள் கூறியது என்பதாம். அதற்குச் செய்யுள்:-

தெந்தார் நறுங்கொன்றைச் சிற்றம்
     பலவர்தில் லைநகரோர்
பந்தார் விரலியைப் பாய்புன
     லாட்டிமன் பாவியெற்கு
வந்தார் பரிசுமன் றாய்நிற்கு
     மாறென் வளமனையிற்
கொந்தார் தடந்தோள் விடங்கா
     லயிற்படைக் கொற்றவரே.

"ஆங்கதனுக் கழுக்கமெய்தி வீங்கு மென்முலை விட்டுரைத்தது"

     (இ-ள்) கொந்து ஆர்தடம் தோள்விடம் கால்அயில் படைக் கொற்றவர்- தபூங்கொத்தாலியன்ற மாலைநிறைந்த பெரிய தோளினையும் நஞ்சினைக் காலும் கூரிய படையினையுமுடைய கொற்றவர்; பாவி எற்கு என் வளமனையின் நிற்குமாறு- தீவினையாட்டியேனாகிய என்பொருட்டு எனது வளவிய மனையில் வந்து நிற்கும் முறைமை; செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம்பலவர் தில்லைநகர் - சிவந்த மாலையாகிய நறிய கொன்றை மலரினையுடைய திருச்சிற்றம்பலவருடைய இத்தில்லை நகரத்தின்கண்; ஓர் பந்துஆர் விரலியைப் பாய்புனல் ஆட்டி - பந்து பயின்ற விரலாள் ஒருத்தியைப் பாயும் புனலாடலைச் செய்வித்து; வந்தார் பரிசும் அன்றாய் நிற்கும் ஆறுஎன்-வெளிப்படத் தவறு செய்து வந்தார் சிலர் நிற்கும் முறையால் நில்லாது மனத்தவறு செய்யாதார் வந்து நிற்குமாறு வந்து நின்றாராயின் அது பொறுத்தலரிது என்பதாம்.

     (வி-ம்.) கொந்து - கொத்து. விடங்கால் அயிற்படைக் கொற்றவர் என்றது இகழ்ச்சி. கொற்றவன் - ஈண்டுத் தலைவன். மன் : ஒழியிசை. இனி கொற்றவர் விரலியைப் புனலாட்டி யெற்கு வந்தார் பரிசுமன்றாய் நிற்கமாறு என் என இயைத்து அதற்கியையப் பொருள்கோடலுமாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - ஊடுதல்.