மூலமும் உரையும்437



திருக்கோவையார் 301 ஆம் செய்யுள்
வழிபாடு கூறல்

     அஃதாவது: மணஞ்செய்த பின்னர் மணமனை காணவந்த செவிலிக்கு, காவலர் உடம்புமுயிரும் போல ஒருவரையொருவர் இன்றியமையாமையால் இவள் கருத்தைக் கடவார்: கமலங் கலந்த தேனுஞ் சந்தனமரமும் போல வியைந்து இவள் கற்புவழி நிற்றலையுடையராய் இவள் வழியே நின்றொழுகாநின்றாரெனத் தோழி தலைமகன் றலைமகள் வழி யொழுகாநின்றமை கூறாநிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

சீரிய லாவியும் யாக்கையு
     மென்னச் சிறந்தமையாற்
காரியல் வாட்கண்ணி யெண்ணக
     லார்கம லங்கலந்த
வேரியுஞ் சந்தும் பியறந்
     தெனக்கற்பி னிற்பரன்னே
பாரியல் கண்டவர்வண் டில்லை
     வணங்குமெங் காவலரே.

"மணமனை காண வந்தசெவி லிக்குத் துணைமலர்க் குழலி தோழி சொல்லியது"

     (இ-ள்) அன்னே-அன்னாய்! கார்இயல் கண்டர்வண்தில்லை வணங்கும் எம் காவலர் -முகில் போலும் கறுத்த மிடற்றினையுடைய இறைவனுடைய வளவிய தில்லைத் திருச்சிற்றம்பலத்தை வணங்குகின்ற எம்மரசராகிய தலைவர்; சீர்இயல் ஆவியும் யாக்கையும் என்னச் சிறந்தமையால் - சீர்மை இயலும் உயிரும் உடம்பும்போல ஒருவரை யொருவர் இன்றியமையாமையால்; கார் இயல் வாள்கண்ணி எண் அகலார்- கரியவியல்பையுடைய வாள்போலும் கண்ணையுடையாளது கருத்தைக் கடவார்; கமலம் கலந்த வேரியும் சந்தும் வியல் தந்தென - தாமரைப்பூவைச் சேர்ந்த தேனும் சந்தன மரமும் இடத்து நிகழ்பொருளும் இடமுமாய் இயைந்து தம் பெருமையைப் புலப்படுத்தினாற் போல இயைந்து; கற்பின் நிற்பர்-இவளது வழிபாட்டின் கண்ணே நிற்பர் என்றவாறு.

     (வி-ம்.) எண்ணகலா ரென்றதனாற் காதலியாதலும், கற்பினிற்பரென்றதனால் வாழ்க்கைத் துணையாதலுங் கூறப்பட்டன. ஆவியும் வேரியும் தலைமகட் குவமையாகவும், யாக்கையுஞ் சந்தும் தலைமகற் குவமையாகவும் உரைக்க. பிரித்துவமையாக்காது, இவரது கூட்டத்திற்கு அவற்றது கூட்டமுவமையாக வுரைப்பினுமமையும். காரியல் கண்டர் வண்டில்லை வணங்குமென்றதனான், இவர தில்வாழ்க்கை இன்றுபோல என்றும் நிகழுமென்பது கூறினாளாம்.