திருக்கோவையார் 166 ஆம் செய்யுள்
முகங்கண்டு மகிழ்தல்
அஃதாவது:
தலைவன் தலைவி மருங்கணைந்த பொழுது அவளது முகமகிழ்ச்சி கண்டு, இவள் குமுதமலர் யான்
திங்கள் எனத் தன்னயப் புணர்த்தி மகிழாநிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:-
அழுந்தே னரகத் தியானென்
றிருப்பவந் தாண்டுகொண்ட
செழுத்தேன் றிகழ்பொழிற் றில்லைப்
புறவிற் செறுவகத்த
கொழுந்தேன் மலர்வாய்க் குமுத
மிவள்யான் குரூஉச்சுடர்கொண்
டெழுந்தாங் கதுமலர்த் தும்முயர்
வானத் திளமதியே.
|
"முகையவிழ் குழலி முகமதி கண்டு திகழ்வேல் அண்ணல் மகிழ் வுற்றது"
(இ-ள்)
யான் நரகத்து அழுந்தேன் என்று இருப்ப-யான் இனி நரகத்தில் விழுந்து அழுந்தேன் என்று
இறுமாந் திருக்கும்படி வந்து ஆண்டுகொண்ட செழுந்தேன் திகழ்பொழில் தில்லைப் புறவில்-தானே
வந்து ஆண்டுகொண்டு செழுவிய தேன்போல்வானது விளங்கும் பொழிலையுடைய தில்லையைச் சூழ்ந்த
இளங்காட்டில்; செறு அகத்த பொழுந்தேன் மலர்வாய்க் குமுதம் இவள்- செய்யின் கண்ணவாகிய
கொழுவிய தேனைவும் மலரா நின்ற வாயையுமுடைய குமுதமலரே இவளாவள்; யான் குரூஉச் சுடர்கொண்டு
எழுந்து ஆங்கு அது மலர்த்தும் உயர்வானத்து இளமதி- யானோ நிறத்தையுடைய நிலாவைக் கொண்டெழுந்து
அக்குமுதமலரை மலர்த்துகின்ற உயர்ந்த வானத்தின் கண்ணதாகிய முதிராத திங்கள் ஆவேன்
என்க.
(வி-ம்.)
நரகம் என்றது ஈண்டுப் பிறவியை, வீடுபேற்றின் பத்தோடு சார்த்த நரகமும் சுவர்க்கமும்
ஒரு நிகரனவாகலின் நரகம் என்றார். ஆண்டுகொண்டான் என்பது பாடமாயின் செழுந்தேனைப்
பொழிலின் மேலேற்றுக. செறு - நீர்நிலையுமாம். வாய்- முகம. மலர்வாய்க் குமுதம் என்றது,
கிண்கிணிவாய்க் கொள்ளும் நிலைமையை. இதனாலிவள் பருவம் விளங்கும். குரூஉச் சுடர்கொண்டு
மலர்த்தும் எனக் கூட்டிக் குரூஉச் சுடரான் மலர்த்தும் என்றுரைப்பினும் அமையும்.
|