மூலமும் உரையும்455



திருக்கோவையார் 305 ஆம் செய்யுள்
கற்புப் பயப்புரைத்தல்

     அஃதாவது: மணமனை சென்றுவந்த செவிலி தலைவியின் கற்பின் மாண்பினை உணர்த்திப் பின்னர் அவள் தெய்வக் கற்புத் தலைவனுக்கு வென்றி நல்கிப் பயன்படுகின்றமையை நன்றாய்க்குக் கூறியது என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

சிற்பந் திகழ்தரு திண்மதிற்
     றில்லைச்சிற் றம்பலத்துப்
பொற்பந்தி யன்ன சடையவன்
     பூவண மன்னபொன்னின்
கற்பந்தி வாய்வாட மீனுங்
     கடக்கும் படிகடந்தும்
இற்பந்தி வாயன்றி வைகல்செல்
     லாதவ னீர்ங்களிறே.

"கற்புப் பயந்த அற்புத முரைத்தது"

     (இ-ள்) சிற்பம் திகழ்தரு திண்மதில் தில்லை-துண்டொழில் விளங்கும் திண்ணிய மதிலையுடைய தில்லையின்கண் உள்ள; சிற்றம்பலத்துப் பொன்பந்தி அன்ன சடையவன் திருச்சிற்றம்பலத்தின்கண் கூத்தாடுகின்ற பொற்கம்பியின் நிரல் போன்ற சடையையுடைய இறைவன் எழுநதருளியுள்ள; பூவணம் அன்ன பொன்னின் கற்பு - திருப்பூவணம் என்னும் திருப்பதியை யொத்த நலமுடைய திருமகளையொத்த தலைவியினது தெய்வக் கற்பு; அந்திவாய் வடமீனும் கடக்கும் - மாலைக் காலத்தே தோன்றுவதாகிய அருந்ததியின் கற்புடைமையையும் வெல்லும் ஆதலால்; அவன் ஈர்ங்களிறு - தான் எடுத்துக் கொண்ட வினையை இடையூறின்றி இனிதின் முடித்து அவன் ஊராநின்ற மதத்தான் ஈரமுடைய களிற்றியானை; படிகடந்தும் இல்பந்தி வாய் அன்றி வைகல் செல்லாது - நிலத்தைக் கடந்தும் இல்லின்கண் தன் பந்தியிடத்தல்லது தங்காது என்க,

     (வி-ம்.) சிற்பம் - மண்ணீடு. பொற்பந்தி அன்ன சடை என்பதற்குப் பொலிவுடைய அந்திவானம் போலும் சடை எனினுமாம். பூவணம் - திருப்பூயவணம் என்னும் திருப்பதி. பேரின்பம் நல்குதலின் இது தலைவிக்குவமையாயிற்று. பொன்-திருமகள் தலைவிக்கு ஆகுபெயர். வடமீன் - அருந்ததி. அந்திக் காலத்துக் கற்புடை மகளிராற் றொழப்படுதலின் அந்திவாய் வடமீன் என்றாள். தலைவியின் கற்புத் தலைவனுக்கு்வாகை நல்கும் மாண்புடையது என்பது கருத்து. மெய்ப்பாடு - உவகை. பயன் - நற்றாயை மகிழ்வித்தல்.