மூலமும் உரையும்473



திருக்கோவையார் 214 ஆம் செய்யுள்:
வழிப்படுத்துரைத்தல்

     அஃதாவது: ஓம்படுத்துரைத்த தோழி, ஆயமுமன்னையும் பின்வராமல் இவ்விடத்தே நிறுத்தி இவ்வூரிடத்துள்ள அலரையு மொரு வாற்றானீக்கி யானும் வந்து நுங்களைக் காண்பேனாக; நீயிருந் திருவொடுசென்று நும்பதியிடைச் சேர்வீராமின்என இருவரையும் வழிப்படுத்துக் கூறாநிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

ஈண்டொல்லை யாயமு மௌவையு
     நீங்கவிவ் வூர்க்கவ்வைதீர்த்
தாண்டொல்லை கண்டிடக் கூடுக
     நும்மையெம் மைப்பிடித்தின்
றாண்டெல்லை தீரின்பந் தந்தவன்
     சிற்றம் பலநிலவு
சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று
     சேர்க திருத்தகவே.

"மதிநுதலியை வழிப்படுத்துப் பதிவயிற் பெயரும் பாங்கி பகர்ந்தது"

     (இ-ள்) எம்மைப் பிடித்து ஆண்டு . எம்மை வலிந்து பிடித்தாண்டு; இன்று எல்லைதீர் இன்பம் தந்தவன் சிற்றம்பலம் நிலவு-இன்று எல்லையை நீங்கிய வின்பத்தைத் தந்தவனது சிற்றம்பலம் நிலைபெற்ற; சேண்தில்லை மாநகர் வாய்-சேய்த்தாகிய தில்லையாகிய பெரிய நகரிடத்து; திருத்தகச் சென்று சேர்க - நீவிர் பொலிவுதகச் சென்று சேர்வீராமின்; ஆயமும் ஒளவையும் ஈண்டு நீங்க-ஆயமு மன்னையும் பின் வாராது இவ்விடத்தே நீங்க; இவ்வூர்க் கௌவை ஒல்லை தீர்த்து- இவவூரின்கண் உண்டாகிய அலரை யொருவாற்றான் விரைய நீக்கி; ஆண்டு நும்மை ஒல்லை கண்டிடக் கூடுக- யானாண்டு வந்து நும்மை விரையக் காணக்கூடுவதாக என்க.

     (வி-ம்.) ஒல்லை-விரைந்து. ஆயம் - தோழியர் கூட்டம். ஒளவை - அன்னைமார். கவ்வை - அலர். ஒல்லை - விரைவு. பிடித்து என்றது வலிந்து பிடித்து என்பதுபட நின்றது. எல்லைதீர் இன்பம் - எல்லையற்ற பேரின்பம் திரு-அழகு. சேண்தில்லை என்பதற்கு, மதில் முதலாயினவற்றால் உயர்ந்த தில்லை எனினும் அமையும் ஒல்லைக் கண்டிடல் எனல் வேண்டிய புணர்ச்சி விகாரவகையால் வல்லெழுத்துப் பெறாது நின்றது. மெய்ப்பாடு - அழுகை, பயன் - அச்சந் தவிர்த்தல். சேர்க-கூடுக என்பன வியங்கோள் வினைமுற்றுக்கள். நீவிர் சேர்க எனவும், யான் கூடுக எனவும் எழுவாய் வருவித்துக் கொள்க.