திருக்கோவையார் 173 ஆம் செய்யுள்
கடலிடைவைத்துத் துயரறிவி்த்தல்
அஃதாவது:
முதல்நா ளிரவு அல்லகுறிப் பட்டு வாளா மீண்டமையால் தலைவி அவ்விரவில் அடைந்த துன்பத்தைத்
தலைவன் மறுநாளிரவு சிறைப்புறமாக அவனுக்குணர்த்தும் பொருட்டுத் தோழி கடலொடு கூறாநிற்றல்
என்றவாறு. அதற்குச் செய்யுள்:-
சோத்துன் னடியமென்
றோரைக்
குழுமித்தொல் வானவர்சுழ்ந்
தேத்தும் படிநிற் பவன்றில்லை
யன்னா ளிவடுவள
வார்த்துன் னமிழ்துந் திருவும்
மதியு மிழந்தவநீ
பேர்த்து மிரைப்பொழி யாய்பழி
நோக்காய் பெருங்கடலே.
|
எறிகடல் மேல்வைத் திரவரு துயரம் அறைக ழலவற் கறிய வுரைத்து
(இ-ள்)
பெருங்கடலே-பெரிய கடலே; ஆர்த்து உன் அமிழ்தும் திருவும் மதியும் இழந்து-முற்காலத்தே
நீ நாவடக்கமின்றி இவ்வாறு ஆரவாரம் செய்து உன் அமிழ்தத்தையும் திருமகளையும் திங்களையும்
இழந்து வைத்தும்; நீ பேர்த்தும் அவம் - நீ மீண்டும் ஒரு பயனும் இன்றி; சோத்து உன்
அடியம் என்றோரை- எம்பெருமானே! சோத்தம் எளியம் உன் அடி யேங்கள் என்று ஒருகால்
சொன்னவரையும்; தொல்வானவர் குழுமிச் சுழ்ந்து ஏத்தும்படி நிற்பவன்- பழையவராகிய
தேவர்கள் கூடிப் பரிவாரமாய்ச் சுழ்ந்து நின்று ஏத்தும்படி என்றும் கூத்தாடி நிற்பவனாகிய
இறைவனுடைய; தில்லை அன்னாள் இவள் துவள- திருத்தில்லையை யொத்த எம்பெருமாட்டி வாடும்படி;
இரைப்பு ஒழியாய்- ஆரவாரித்தலை ஒழிகின்றிலை; பழி நோக்காய்!-காரணமின்றிப் பிறரை
வருத்துதலால் வரும் பழியையும் நோக்குகின்றிலை ! நினைக்கிது நன்றோ என்க.
(வி-ம்.)
சோத்தம்-இழிந்தார் செய்யும் வணக்கம். அது சோத்துஎன நின்றது. சோத்தமடியம் என்பதும்,
அடியமெனிற் குழுமித் தொல்லை வானவர் என்பதும், குழீஇத் தொல்லை வானவர் சுழ்ந்து
ஏத்தும்படி வைப்பவன் என்பதும் பாடம், திருவும் மதியும் என்பது செல்வமும் அறிவும் என
வேறுபொருள் தோன்றவும் நின்றது,
|