மூலமும் உரையும்485



திருக்கோவையார் 12 ஆம் செய்யுள்
பிரிவுணர்த்தல்

     அஃதாவது: இயற்கைப் புணர்ச்சியின்கண் தலைவன் காட்சி முதலிய ஐவகைப் புணர்ச்சியும் பெற்றுப் புணர்வதன் முன்னும் புணர்ந்த பின்னும் ஒத்த அன்பினனாய் நின்றவன் அவள் தன் ஆயத்தார் உணர்ந்துழி இறந்துபடுதலுங் கூடும் ஆதலின் யான் சிறிது பிரிந்து மீண்டும் வருதல் வேண்டும் என்று எண்ணி அவளை ஆற்றுவிக்கும் பொருட்டுத் தலைவியின் நலம் பாராட்ட அதுகேட்ட தலைவி எம்பெருமான் முன்னின்று வாய்திறந்து பெரியதொரு நாணன்மையான் பிரிவேன் என்று உட்கொண்டு வருந்துகின்றாள் என்று அவளுக்குத் தான் பிரிவின்மை கூறாநிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

சிந்தா மணிதெண் கடலமிர்
     தந்தில்லை யானருளால்
வந்தா லிகழப் படுமே
     மடமான் விழிமயிலே
அந்தா மரையன்ன மேநின்னை
     யானகன் றாற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோவென்னை
     வாட்டந் திருத்துவதே.

பணவள ரல்குலைப் பயிர்ப்பு றுத்திப் பிணிமலர்த் தாரோன் பிரிவுணர்த் தியது

     (இ-ள்) சிந்தாமணி தென்கடல் அமிர்தம் தில்லையான் அருளாள் வந்தால் -ஒருவன் தவஞ்செய்து பெறுஞ் சிந்தாமணியும் தெளிந்த கடலினமிர்தமும் வருத்தமின்றித் தில்லையானருளாற் றாமே வந்தால்; இகழப்படுமே-அவை அவனாலிகழப்படுமோ ; மடமான் விழிமயிலே - மடமான் விழிபோலும் விழியையுடைய மயிலே ; அம் தாமரை அன்னமே - அழகிய தாமரைக்கண் வாழும் அன்னமே ; நின்னை யான் அகன்று ஆற்றுவனோ - நின்னை யான் பிரிந்தாற்றி யுளனாவனோ ; சிந்தாகுலம் உற்று என்னை வாட்டந் திருத்துவது என்னோ - சிந்தையின் மயக்கமுற்று என்னை வாட்டுவதென்னோ என்றவாறு.

     (வி-ம்.) அந்தாமரை யன்னம் திருவென்பாருமுளர், நின்னையென்புழி உயிரினுஞ் சிறந்த நின்னை யென்றும், யானென்புழி இருதலைப் புள்ளினோருயிரேனாகிய யானென்றும், அச்சொற்களான் விளங்கின, வாட்டந் திருத்துவதே யென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீரவாய், வாட்டுவதேயென்று பொருள் பட்டு, இரண்டாவதற்கு முடிபாயின, வாட்டத் திருத்துவதென்று பாடமாயின்,