திருக்கோவையார் செய்யுள்:
பொழுதுகண்டு மயங்கல்
அஃதாவது
: தலைவன் ஒருவழித் தணந்தமையை ஆற்றாது புலம்பாநின்ற தலைவி மாலைக்காலம் வருதல்
கண்டு அந்தோ! கதிரவனும் மறைந்தான்; அளிசெய்து காக்கும் தலைவரும் சேணிடத்துள்ளார்.
இவ்விடத்து மீனுண்ட அன்னங்களும் போய்த் தஞ் சேக்கைகளை அடைந்தன. இனி, யான் எவ்வாறு
ஆற்றியிருப்பேன் என்று மயங்குதல் என்றவாறு, அதற்குச் செய்யுள் :-
பகலோன் கரந்தனன்
காப்பவர்
சேயர்பற் றற்றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி
யேனெவ ரும்புகலத்
தகலோன் பயிறில்லைப் பைம்பொழிற்
சேக்கைக் ணோக்கினவா
லகலோங் கிருங்கழி வாய்க்கொழு
மீனுண்ட வன்னங்களே.
|
மயல்தரு மாலை வருவது கண்டு கயல்தரு கண்ணி கவலை யுற்றது
(இ-ள்)
பகலோன் காந்தனன் - கதிரவன் மறைந்தான் ; காப்பவர் சேயர்- இந்த மாலைக்காலத்தே
வருந் துன்பத்தைக் காக்கும் எம்பெருமானும் சேணிடத்தின்கண் இருந்தார் ; அகல் ஓங்கு
இருங்கழிவாய் கொழுமீன் உண்ட அன்னங்கள் - அதுவேயுமன்றி இந்த அகன்று பெருகிய கரிய
கழியினிடத்தே கொழுவிய மீனையுண்ட அன்னப்பறவைகள் தாமும் இவ்விடத்தை விட்டு ; பற்று
அற்றவர்க்குப் புகலோன் - புலன்களிற் பற்றற்றவர்க்குப் புகலிடமாய் உள்ளவனும் ;
புகுநர்க்குப் போக்கு அரியோன் - தன் திருவடி நீழலின்கண் வந்து புகுந்த மெய்யடியார்க்குப்
பின்பு பிரிந்து போதற்கு அரியவனும் ; எவரும் புகலத் தகலோன் - எத்தகையோரும் எத்துதற்குரிய
தகுதியை உடையவனும் ஆகிய இறைவன் ; பயில் தில்லைப் பைம்பொழில் சேக்கைகள் நோக்கின
- கூத்தாடநின்ற திருத்தில்லையின்கண் உள்ள பசிய சோலைகளினுள்ள தத்தம் சேக்கைகளை
நோக்கிச் சென்றன ; இனி யான் எவ்வாறு ஆற்றுவேன் என்க.
(வி-ம்.)
பகலோன் - கதிரவன், காப்பவர் - தலைவர், சேயர்- சேணிடத்துள்ளனர். பற்று - அவா.
புகலோன் - புகலிடமாய் உள்ளவன். புகல- எத்த, தகலோன் - தகுதியையுடையோன்
|