52கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 104 ஆம் செய்யுள்
இளமை கூறி மறுத்தல்

     அஃதாவது: தலைவன் தலைவிக்குச் சிறப்புடைத் தழைகொண்டு வந்தானாக; அது கண்ட தொழி குழலும் முலையும் குவியாத குதலைச் சொல்லிக்கு நீ சொல்லுகின்ற காரியம் சிறிதும் இயைபுடைத்தன்றென அவளது இளமை கூறி மறுத்துரைத்தது என்பதாம். அதற்குச் செய்யுள்:-

உருகு தலைச்சென்ற வுள்ளத்து
     மம்பலத் தும்மொளியே
பெருகு தலைச்சென்று நின்றோன்
     பெருந்துறைப் பிள்ளைகள்ளார்
முருகு தலைச்சென்ற கூழை
     முடியா முலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக்கென்
     னோவைய வோதுவதே.

முளை யெயிற் றரிவை விளைவில ளென்றது.

     (இ-ள்) ஐய!-ஐயனே! உருகுதலைச் சென்ற உள்ளத்தும்-அன்பாலே உருகுதலையுடைய மெய்யடியார் நெஞ்சமும்; அம்பலத்து-திருவம்பலமும் ஆகிய இரண்டிடத்தும் ஒப்ப; ஒளி பெருகுதலைச் சென்று நின்றோன்-திருவருளொளி பெருகுதலையடைந்து நின்ற சிவபெருமான் எழுந்தருளிய; பெருந்துறை-திருப்பெருந்துறை என்னும் ஊரின்கண் வாழ்பவளாகி; பிள்ளை-எம்பெருமாட்டியாகிய பிள்ளைமையுடையோள்; கள் ஆர் முருகு தலைச்சென்ற குழை முடியா-தேன் பொருந்திய நறுமனங் தன்பாலுடைய கூந்தல்கள் இன்னும் ஒருசேர முடிக்கப்பட்டில; முலைபொடியா-முலைகள் இன்னும் முகிழ்த்தில; ஒரு குதலை மழலைச் சில் மொழியாட்கு-அத்தகையா ளொருத்தியாகிய பொருள் விளங்காதனவும் எழுத்துருவம் பெறாதனவுமாகிய சில மொழிகளே மிழற்றும் எம்பெருமாட்டிக்கு; ஓதுவது என்-நீ கூறுமிக் காரியம் யாதாம்! சிறிது மியைபுடைத் தன்றுகாண்! என்பதாம்.

     (வி-ம்.) ஒளியே என்புழி ஏகாரம்: அசைநிலை. கள்ளர் கூழை; முருகுதலைச் சென்ற கூழை எனத் தனித்தனி கூடுக. ஒளி-அருளொளி; உருகுதலைச் செல்லுதலாவது, உருகுதலையுடைத்தாதல். இரண்டிடத்தும் ஒப்ப என்க. நின்றோன்: சிவபெருமான். குதலைமை-பொருள் விளங்காமை. மழலை-எழுத்துருவம் பெறாமை. மெய்ப்பாடு-அச்சத்தைச்சார்ந்த பெருமிதம். பயன்-செவ்வி பெறுதல்.