மூலமும் உரையும்521



திருக்கோவையார் 277 ஆம் செய்யுள்
வாய்மைகூறி வருத்தந்தணித்தல்

     அஃதாவது : தலைவன் வருந்துணையும் நீ ஆற்றியிருத்தல் வேண்டும் என்று வற்புறுத்தும் தோழியோடு பிணங்கிப் பின்னும் வருந்துகின்ற தலைவியை நோக்கித் தோழி ‘அன்புடையோய்! நீ நம்பெருமான் மொழி பொய்யாகும் என்று கருதுவாயாயின் இவ்வுலகத்து மெய்யென்பது சிறிதும் இல்லையாய் விடும் காண்! எனத் தலைவனுடைய வாய்மையை விதந்துகூறி அவனை ஆற்றுவித்து என்றவாறு, அதற்குச் செய்யுள் :-

மொய்யென் பதேயிழை கொண்டவ
     னென்னைத்தன் மொய்கழற்காட்
செய்யென் பதேசெய் தவன்றில்லைக்
     சூழ்கடற் சேர்ப்பர் சொல்லும்
பொய்யென்ப தேகருத் தாயிற்
     புரிகுழள் பொற்றோடியாய்
மெய்யென்ப தேதுமற் றில்லைகொ
     லாமிவ் வியலிடத்தே.

வேற்றடங் கண்ணியை ஆற்று வித்தது.

     (இ-ள்) மொய் என்பு அது ஏ இழை கொண்டவன் - வலிமையுடைய எலும்பினையே தனக்கு அணிகலானாகக் கொண்டவனும் ; என்னைத் தன் மொய்கழற்கு ஆள்செய் என்பதே செய்தவன் - எளியேனாகிய என்னைத் தன்னுடைய வலிய திருவடிகளுக்கு ஆட்செய் என்று வெளிப்பட்டு நின்று சொல்லுதலையே செய்தவனும் ஆகிய கூத்தப்பெருமானுடைய ; தில்லைசூழ்கடல் சேர்ப்பர் சொல்லும் - தில்லை நகரத்தைச் சூழ்ந்துள்ள கடலை உடைத்தாகிய நெய்தனிலத் தலைவனாகிய நம்பெருமானுடைய சொல்லும் ; பொய் என்பதே கருத்து ஆயின் - பொய்யாகும் என்பதே நின் கருத்தாய்விடின் ; புரிகுழல் பொன் தொடியாய் - சுருண்ட கூந்தலையும் பொன்னாலியன்ற வளையலையு முடையோய் ; இவ்வியல் இடத்து மெய் என்பதே ஏதும் இல்லை கொல் ஆம் - இவ்வுலகத்தின்கண் மெய்யென்பது ஒரு சிறிதும் இல்லையாய் விடுங்காண், ஆதலால் அவர் கூறியபடியே விரைந்து வந்து நினக்கு அளிசெய்வர் என்க.

     (வி-ம்.) மொய் - வலிமை, என்பு - எலும்பு, என்பதே என்புழி அது: பகுதிப்பொருளது, ஏகாரம் பிரிநிலை, இழை - அணிகலன். திருமால் முதலியோர் என்பாகலின் மொய்யென்பு என்றார். இழிந்த என்பை அணிகலன் ஆக்கிக்கொண்டாற் போலவே இழிந்த என்னையும் ஆட்கொண்டான் என்பது கருத்து. சேர்ப்பர் - நெய்தனிலத்தலைவர்.