544கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 320 ஆம் செய்யுள்
முன்பனிக்கு நொந்துரைத்தல்

     அஃதாவது: பிரிவாற்றாமையால் வருந்துகின்ற தலைவி முன் பனிப் பருவம் வந்துழியும் அவன் வாராமை கண்டு பின்னு்ம் வருந்துபவள் அந்தோ! இப்பனியிடைத் தனியே கிடந்து வாடும்படி என்னை ஈன்ற தாயை நான் நோவதல்து பின்னர் யாரை நோவேன் என்று தாயை நொந்து கூறாநிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள் :-

சுற்றின வீழ்பனி தூங்கத்
     துவண்டு துயர்கவென்று
பெற்றவ ளேயெனைப் பெற்றாள்
     பெடைசிற கானோடுக்கிப்
புற்றில வாளர வன்தில்லைப்
     புள்ளுந்தம் பிள்ளைதழீஇ
மற்றினஞ் சூழ்ந்து துயிலப்
     பெறுமிம் மயங்கிறளே.

ஆன்றபனிக் காற்றாதழிந் தீன்றவளை ஏறைநொந்தது.

     (இ-ள்) புற்றில வாள் அரவன் தில்லைப்புள்ளும் - தாம் வாழுதற்குரிய புற்று இலவாகிய ஒளியையுடைய பாம்பையணிந்த இறைவனுடைய தில்லையின்கண் மக்களேயன்றிப் பறவைகளும் ; பெடை சிறகால் ஒடுக்கி - பெடைகளைச் சிறகினுள் அடக்கி - தம் பிள்ளை தழீஇ - தம் குஞ்சுகளையும் அச்சிறகால் அணைத்துக்கொண்டு ; இனம் சூழ்ந்து துயிலப்பெறும் இம்மயங்கு இருள்- தம்மினத்தோடே சூழ்ந்து அஞ்சாது துயிலப் பெறுகின்ற இச்செறிந்த இருளின் கண்ணே ; சுற்றின வீழ்பனி தூங்க - உன் மேனியெங்கும் சுற்றிய வீழா நின்றபனி இடையறாது நிற்ப ; துவண்டு துயர்க என்று - அதற்கு ஒரு மருந்தின்றி நீ உடல் மெலிந்து துன்புறுவாயாக என்று ; எனைப் பெற்றவளே பெற்றாள் - என்னை ஈன்ற தாயே ஈன்றாள் ஆயின் இனியான் யாரை நோவது என்க.

     (வி-ம்.) இறைவன் அணிந்த பாம்புகள் வேள்வித் தீயிற் பிறந்து எப்பொழுதும் அவன் திருமேனியின்கண் வாழ்தலாலே புற்றிலவாகிய அரவு என்றாள் என்பது மக்களே யன்றிப் பறவைகளும் என்பதுபட நின்றது. பிள்ளை- ஈண்டுக் குஞ்சு, சுற்றின ; பெயரெச்சம், சுற்றின வாய்த்தூங்க எனக் கோடலுமாம். பெற்றவள் - தாய், இனி யான் யாரை நோவது என்பது குறிப்பெச்சம், மெய்ப்பாடு ; அழுகை, பயன் ; ஆற்றாமை நீங்குதல்.