546கல்லாடம்[செய்யுள்76]



புலம்ப பெரிதாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்..................... இடும்பையும் ஆகிய விடத்தும்; எனவரும் விதிகொள்க.

1-6: கடல்........................கூடவும்

     (இ-ள்) கடல் மகள் வடவை உள்வைத்து மெய்காயவும்-கடலாகிய பெண் இப்பனியினது குளிருக்கு ஆற்றாது வடவைத் தீயைத் தன்னிடத்தே வைத்துக் கொண்டு உடல் காயவும்; மலைமகள் தழல்தரு மேனிஒன்று அணைக்கவும்- பார்வதி இக்குளிருக் கஞ்சித் தீயைத் தருகின்ற இறைவனுடைய திருமேனியை அணைத்துக் கொண்டிருக்கவும்; மாசு அறு திருமகள்-குற்றமற்ற திருமகள்; மலர் புகுந்து-இதற்கஞ்சித் தாமரை மலரினுட் புகுந்து ஆயிரம் புற இதழ் புதவு அடைத்து-அதன் ஆயிரமாகிய புறவிதழ்களாகிய கதவுகளை அடைத்துக் கொண்டு; அதன் வெதுப்புறுக்கவும்-அதனாலுண்டாகும் வெப்பத்தைப் பொருந்தவும்; சயமகள் மனம் சீற்றத்தழல் வைத்து- வெற்றித்திருவாகிய கொற்றவையோ இப்பனிக்கஞ்சித்தன் நெஞ்சினூடே சினத்தீயை வளர்த்துக் கொண்டு; திணிபுகும் வென்றி செரு அழல் கூடவும்-திண்மையால் செல்லுதற்குரிய வெற்றியுள்ள போராகிய வெம்மையைப் பொருந்தவும் என்க.

     (வி-ம்.) கடல்மகள்-கடலாகிய பெண். வடவை-வடவைத்தீ. மெய்காத்தல்- மெய்யைக் காய்வித்தல். மலைமகள்-பார்வதி. தழல் தருமேனி-தீ வண்ணனாகிய இறைவன் திருமேனி. அவனுடைய எண்வகை வடிவங்களுள் நெருப்பும் ஒன்றாகலின் தழல்தரு மேனி என்றாள். மலர்-ஈண்டுக் குறிப்பால் தாமரை மலரை உணர்த்திற்று. புதவு-கதவு. அதனாலுண்டாகும் வெதுப்பு என்க. வெதுப்புறுத்தல்: ஒரு சொல். அஃதாவது வெப்பமுண்டாக்கிக் கோடல் என்க. சயமகள் என்றது கொற்றவையை. அவள் இப்பனிக் கஞ்சி உள்ளேயும் சீற்றத்தழல் வைத்துப் புறத்தேயும் செருஅழல் கூடினாள் என்னும் நயமுணர்க. சீற்றத்தழல்-சினமாகிய தீ. திணி-திண்மை. செருஅழல்-போராகிய நெருப்பு.

7-8: ஐயர்..................அணையவும்

     (இ-ள்) ஐயர் பயிற்றிய விதி அழல்-மறையவர் தமக்குக் கற்பித்துள்ள விதிகளையுடைய வேள்வித்தீயினைச் சார்ந்திருந்தது; ஓம்பவும்-இக்குளிருக்கு அஞ்சி அதனை வளர்ப்பவும்; அமரர் அனைவரும்-தேவர்கள் எல்லோரும் தீக்காய்தற் பொருட்டு; அவ்வனற்கு அணையவும்-அந்த வேள்வித் தீயை விரும்பி வந்து சேராநிற்பவும் என்க.

     (வி-ம்.) பயிற்றிய என்றது தம்மாசான் பயிற்றிய என்பதுபட நின்றது. ஐயர்-ஈண்டு மறையோர். ஐயர் தம்முடைய அறம் என்பது பற்றி அன்றியும் குளிருக்குத் தீக்காய்தற் பொருட்டும் வேள்வித்