திருக்கோவையார் 331 ஆம் செய்யுள்
மறவாமை கூறல்
அஃதாவது:
வினைமுற்றிவந்து தலைமகளோடு பள்ளியிடத்தானாகிய தலைமகன், நீயிர் வினையிடத்தெம்மை
மறந்தீரேயென்ற தோழிக்கு, யான் பாசறைக்கட் டாழ்த்தவிடத்தும், கண் முத்திலங்க
நின்று, இவள் என்னுடைய நெஞ்சைவிட்டு நீங்கிற்றிலள்; ஆதலால், யான் மறக்குமாறென்னோவெனத்
தானவளை மறவாமை கூறாநிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:-
கருங்குவ ளைக்கொடி
மாமலர்
முத்தங் கலந்திலங்க
நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற்
றிலள்நின்று நான்முகனோ
டொருங்கு வளைக்கரத் தானுண
ராதவன் றில்லையொப்பாய்
மருங்கு வளைத்துமன் பாசறை
நீடிய வைகலுமே.
|
பாசறை முற்றப் பைந்தொடியோ டிருந்து மாசறு தோழிக்கு வள்ள லுரைத்தது.
(இ-ள்)
நான்முகனோடு ஒருங்கு வளைக்கரத்தான் உணராதவன் தில்லை ஒப்பாய்-நான்முகனோடேகூடச்
சங்கை ஏந்திய கையையுடைய திருமாலும் உணர்தற்கரியவனாகிய இறைவனுடைய தில்லை நகரத்தை
ஒத்த நன்மையுடைய தோழியே! கேள்; மருங்கு வளைத்து மன்பாசறை நீடிய வைகலும்- போர்க்களத்தின்
பக்கத்தே சூழ்ந்து மன்னனுடைய பாசறையின்கண் யான் தங்கியிருந்த நாளின்கண்ணும்; கருங்குவளைக்
கடிமா மலர் முத்தம் கலந்து இலங்க நின்று-கண்ணாகிய கரிய குவளையினது புதிய பெரிய மலர்
கண்ணீராகிய முத்துக்களோடு கலந்து விளங்கும்படி நின்று; நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற்றிலள்-நெருங்கிய
வளையலணிந்த இக்கிளியை ஒப்பவள் ஒருகாலமும் என்னைவிட்டு நீங்கினாளில்லை, அதனால்
எம்முள் பிரிவென்பதொன்றில்லை என்க.
(வி-ம்.)
மாமலர்-பெரிய மலர். முத்தம்-முத்து-கிள்ளை-கிளிபோல்பவள். நீங்கிற்றிலள்: ஒருசொல்.
வளைக்கரத்தான்-சங்கேந்திய திருமால். நான்முகன் பறவையாகிப் பறந்தும் திருமால்
பன்றியாகி மண்ணகழ்ந்தும் இறைவனுடைய முடியும் அடியும் காணப்படாமையின் நான்முகனும் வளைக்கரத்தானும்
உணராதவன் என்றார். வைகல்-நாள். அதனால் எம்முள் பிரிவென்பதொன்றில்லை என்பது
குறிப்பெச்சம். மெய்ப்பாடு-உவகை. பயன்-தலைவியை மகிழ்வித்தல்.
|