மூலமும் உரையும்559



திருக்கோவையார் செய்யுள்: 353
பொறையுவந்துரைத்தல்

     அஃதாவது: தலைவனைப் பரத்தையர் எதிர்கொண்டழைத்தேகினர் என்று கேள்வியுற்ற தலைவி நெஞ்சுடைந்தும் அத்துன்பம் புறத்தார்க்குப் புலப்படாமல் மறைத்துப் பொறுமையுடன் இருந்தாளாக, அப்பெருந்தன்மையைக் கண்ட தோழி ‘யான் இங்ஙனம் ஆற்றாதொழிவேனாக; இதனைப் பொறுத்திருந்த எம்பெருமாட்டியை யான் என் சொல்லிப் பாராட்டுவேன்!’ என்று அவளை உவந்து கூறியது. அதற்குச் செய்யுள்:-

சுரும்புறு கொன்றையன் தொல்புலி
     யூர்ச்சுருங் கும்மருங்குற்
பெரும்பொறை யாட்டியை யென்னின்று
     பேசுவ பேரொலிநீர்க்
கரும்புறை யூரன் கலந்தகன்
     றானென்று கண்மணியு
மரும்பொறை யாகுமென் னாவியுந்
     தேய்வுற் றழிகின்றதே.

கள்ளவிழ் கோதையைக் காதற் றோழி உள்ளவிழ் பொறைகண் டுவந்து ரைத்தது.

     (இ-ள்) பேரொலி நீர்க் கரும்பு உறை ஊரன் கலந்து அகன்றான் என்று-பெரிய முழக்கத்தையுடைய நீரையுடைய கரும்பு தாங்கும் ஊரையுடையவன் எம்பெருமாட்டியைக் கலந்து வைத்து நீங்கினான் என்று நினைத்தலால்; கண்மணியும் அரும்பொறை ஆகும்-அழுதழுது வீங்கி என் கண்மணியும் தாங்குதற்கரிய பாரமாகா நின்றன; என் ஆவியுந் தேய்வுற்று அழிகின்றது-என் உயிரும் தேய்ந்தழியா நின்றது; யான் இவ்வாறாகவும் சுரும்பு உறு கொன்றையன் தொல்புலியூர்-வண்டுகள் வாழும் கொன்றைப் பூவினையுடைய இறைவனுடைய பழையதாகிய புலியூரின்கண்; சுருங்கும் மருங்குல் பெரும் பொறையாட்டியை-சுருங்கிய இடையினையுடைய பெரிய பொறுமையினையுடைய எம்பெருமாட்டியை; என் இன்று பேசுவ-கலங்காது நின்ற பெரிய பொறையினையுடைய எம்பெருமாட்டியை யான் இப்பொழுது பாராட்டுவன என்னையோ என்க.

     (வி-ம்.) என் கண்மணியுந் தேய்வுற்றழியா நின்றது. ஆவியுமரும்பொறையாகா நின்றதென்று கூட்டுவாரு முளர். உள்ளவிழ் பொறை-நெஞ்சுடைந்து புறத்து வெளிப்படாத பொறை. மெய்ப்பாடு-அழுகை சார்ந்த உவகை. பயன்-தலைமகளை வியத்தல்.