திருக்கோவையார் செய்யுள் 273
நெஞ்சொடு வருந்தல்
அஃதாவது:
தலைவன் வரைபொருட்குப் பிரிந்தமை தோழி கூறக் கேட்ட தலைவி பெரிதும் வருந்தி அந்தோ!
அன்று அவரை விடாமல் என்னை விட்டு அவர் தேர்ப்பின் சென்றது நெஞ்சம் இன்றும் அவ்வாறு
செய்யாமல் என்னோடிருந்து என்னை வருத்துகின்றது எனத் தன் நெஞ்சொடு
பிணங்கிக் கூறியது என்றவாறு. அதற்குச் செய்யுள்:-
ஏர்ப்பின்னை
தோண்முன் மணந்தவ
னேத்த வெழிறிகழுஞ்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ
லோன்றில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த
மணலிற் கலந்தகன்றார்
தேர்ப்பின்னைச் சென்றவென் னெஞ்சென்
கொலாமின்று செய்கின்றதே.
|
வெற்பன் நீங்கப் பொற்பு வாடியது.
(இ-ள்)
ஏர்ப்பின்னை தோள் முன் மணந்தவன் ஏத்த-அழகையுடைய நப்பின்னை என்கின்ற நங்கையின்
தோள்களை முற்காலத்துக் கலந்த மாயவன் நின்று வாழ்த்தாநிற்ப; எழில் திகழும் சீர்ப்பொன்னை
வென்ற செறிகழலோன் தில்லைச் சூழ்பொழில்வாய்-அழகு விளங்கும் செம் பொன்னை வென்ற
திருவடிகளை யுடையவனது தில்லையின்கண் சூழ்ந்துள்ள பொழிலின்கண்; கார்ப்புன்னை பொன்
அவிழ் முத்த மணலில்-கரிய புன்னை மரம் பொன்போல மலருகின்ற முத்துப்போன்ற மணலை
யுடையதோரிடத்தே; கலந்து அகன்றார் தேர்ப்பின்னைச்சென்ற என் நெஞ்சு-என்னைக்கூடிப்
பிரிந்து சென்ற எம்பெருமானுடைய தேரின் பின்னே என்னைக் கைவிட்டுச் சென்ற என்னுடைய
நெஞ்சம்; இன்று செய்கின்றது என்கொலாம்-இவ்விடத்தே இற்றை நாள் அங்ஙனம் செல்லாமல்
என்னோடிருந்து என்னை வருத்துகின்றது என்னையோ அறிகின்றிலேன் என்க.
(வி-ம்.)
ஏர்-அழகு. பின்னை-நப்பின்னைப் பிராட்டி. பின்னை தோள் மணந்தவன்-மாயவன். எழில்-அழகு.
சீர்-சிறப்பு. பொன்னை நிறத்தால் வென்ற கழல் என்க. கார்ப்புன்னை-கரிய புன்னை.
பொன்னவிழ்-பொன்போல மலருகின்ற முத்த மணல்-முத்துப் போன்ற மணல். அகன்றார்-பெயர்.
இன்றும் அவ்வாறு செல்லாது என்னோடிருந்து என்னை வருத்துகின்றது என்னையோ! என்பது கருத்து.
மெய்ப்பாடு-அழுகை. பயன்-ஆற்றாமை நீங்குதல்.
|