திருக்கோவையார் 296 ஆம் செய்யுள்
மணமுரசுகேட்டு மகிழ்ந்துரைத்தல்
அஃதாவது:
தோழி தலைமகளுக்குத் தேர்வரவு கூறாநின்ற அந்நிலைமைக்கண் மணமுரசு கேட்டு மனையிலுள்ளார்.
இஃதிவனை நோக்கி யொலியாநின்ற மணமுரசென வுட்கொண்டு யாம் பூரண பொற்குடந் தோரண
முதலாயினவற்றான் மனையை அணி செய்வோமென மகிழ்வொடு கூறாநிற்றல் என்றவாறு. அதற்குச்
செய்யுள்:-
பூரண பொற்குடம்
வைக்க
மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரிய
மார்க்கதொன் மாலயற்குங்
காரண னேரணி கண்ணுத
லோன்கடற் றில்லையன்ன
வாரண வும்முலை மன்றலென்
றேங்கு மணமுரசே.
|
நிலங்காவலர் நீண்மணத்தின் நலங்கண்டவர் நயந்துரைத்தது.
(இ-ள்)
தொல் மால் அயற்கும் காரணன்-பழையவராகிய திருமாலுக்கும் நான்முகனுக்கும் காரணனாயுள்ளானும்;
ஏர் அணி கண் நுதலோன்- அழகுண்டாகிய கண்ணையுடைய நெற்றியையுடையானும் ஆகிய சிவபெருமானுடைய;
கடல் தில்லை அன்ன - கடலையுடைய தில்லையை யொத்த; வார் அணவும் முலை மன்றல் என்று
மணமுரசு ஏங்கும்-வாரால் கட்டப்படுமளவு நிமிரும் முலையினையுடைய நம்பெருமாட்டியினது திருமணம்
என்று கூறி மணமுரசம் முழங்காநின்றது ஆதலால்; பூரணபொன்குடம் வைக்க-வாயில்கள் தோறும்
நீரால் நிறைக்கப்பட்ட பொற்குடங்களை வைத்திடுக; மணி முத்தம் பொன் பொதிந்த
தோரணம் நீடுக-மணியும் முத்தும் பொன்னின்கண் அழுத்திச் செய்த தோரணங்கள் எவ்விடத்தும்
ஓங்குவனவாக; தூரியம் ஆர்க்க - இசைக்கருவிகள் ஆரவாரிப்பனவாக என்க.
(வி-ம்.)
பூரண பொற்குடம்-நீரால் நிறைந்த பொற்குடம். தூரியம்- இசைக்கருவி. மாலையும் அயனையும்
படைத்தலின் மாலயற்குங் காரணன் என்றார். வாரணவும் முலை என்பதற்கு வாரைப் பொருந்து
முலையெனினு மமையும். மெய்ப்பாடு-உவகை, பயன்-நகரணி செய்தல்.
|