திருக்கோவையார் 237 ஆம் செய்யுள்
சுவடுகண்டறிதல்
அஃதாவது:
மகட்போக்கிய செவிலித்தாய் அவளை அடியொற்றித் தேடிச் செல்பவள் பாலை நிலத்தின்கண்
தலைவன் தலைவியர் அடிச்சுவடுகளைக் கண்டறிதல் என்பதாம். அதற்குச் செய்யுள்:
தெள்வன் புனற்சென்னி யோனம்
பலஞ்சிந்தி யாரினஞ்சேர்
முள்வன் பரல்முரம் பதத்தின்முன்
செவ்வினை யேனெடுத்த
ஒள்வன் படைக்கண்ணி சீறடி
யிங்கிவை யுங்குவையக்
கள்வன் பகட்டுர வோனடி
யென்று கருதுவனே.
|
சுவடுபடு கடத்துச்-செவிலியின்கண் டறிந்து.
(இ-ள்) தெள்வன்புனல்
சென்னியோன்-தெளிந்த பெரிய வெள்ளத்தை யுடைத்தாகிய சென்னியினையுடைய சிவபெருமானுடைய;
அம்பலம் சிந்தியார் இனம்சேர்-திருவம்பலத்தை நினைத்தலிலாத மடவொருடைய இனம் சேர்தற்குரிய;
முள்வன் பரல் முரம்பத்தின்-முள்ளையும் வலிய பரற்கற்களையுமுடைய இம் முரம்பு நிலத்தின்கண்
கிடந்த; இங்கிவை-இச்சுவடுகள்; முன்செய் வினையோன் எடுத்த-முற்காலத்தே செய்யப்பட்ட
தீவினையையுடைய டான் எடுத்து வளர்த்த; ஒள்வன் படைக்கண்ணி சீறடி-ஒள்ளிய வலிய அம்பும்
வாளும் வேலும் போலும் கண்களை யுடையாளுடைய சிறிய அடிச்சுவடுகளாம்; உங்குவை-இனி உதோ
தோன்றுகின்ற இச்சுவடுகள்; அக்கள்வன் பகட்டு உரவோன் அடி என்று கருதுவன்-அக்கள்வனாகிய
யானையை யொத்த வலியையுடையானுடைய அடிச்சுவடுகள் என்று யான் உய்த்துணராநின்றேன் என்பதாம்.
(வி-ம்.) வன்மை-ஈண்டு
பெருமைமேற்று. புனல்-நீர், புனற் சென்னியோன்-சிவபெருமான். சிவபெருமானுடைய அம்பலத்தைச்
சிந்தியாதவர் பாலை நிலத்தே எயினர் முதலிய இழி பிறப்பெய்தி வருந்துவர் என்பது
பற்றி அம்பலம் சிந்தியார் இனம் சேர் முரம்பு என்றார். முள்ளும் பரலும் உடைய முரம்பு
என்க. முரம்பத்தின் என்புழி அத்து சாரியை. முரம்பு-ஈண்டுப் பாலை நிலம். யான் இங்ஙனம்
வருந்துதற்குக் காரணம் யான் முற்பிறப்பிற் செய்த தீவினையே என்பாள் செய்வினையே
என்றாள். படை-அம்பு, வேல், வாள் என்பன. இங்கிவை உங்குவை என்பன இவை உவை என்னும்
ஒருசொன் நீர்மையன. பகடு.களிற்றியானை.
|