திருக்கோவையார்
செய்யுள் : 311
வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தல்
அஃதாவது:
கலக்கங் கண்டுரைத்த தோழிக்கு, முன்னிலைப் புறமொழியாக நின்னிற் பிரியேன் பிரியின்
ஆற்றேனென்று சொன்னவர் தாமே பிரிவராயின், இதற்கு நாஞ்சொல்லுவதென்னோவெனத் தலைவனது
வாய்மொழி கூறித் தலைவி வருந்தா நிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:-
பிரியா மையுமுயி ரொன்றா
வதும்பிரி யிற்பெரிதுந்
தரியா மையுமொருங் கேநின்று
சாற்றினர் தையன்மெய்யிற்
பிரியாமை செய்துநின் றோன்றில்லைப்
பேரிய லூரரன்ன
புரியா மையுமிது வேயினி
யென்னாம் புகல்வதுவே.
|
தீதறு கல்விக்குச் செல்வன் செல்லுமெனப் போதுறு குழலி புலம் பியது.
(இ-ள்)
தையல் மெய்யின் பிரியாமை செய்து நின்றோன் தில்லைப் பேர் இயல் ஊரர்-உமாதேவியார்
தனது திருமேனியினின்றும் பிரியாமையைச் செய்து நின்றவனுடைய தில்லை நகரத்தின்கண்
பெருந்தன்மையுடைய நம்பெருமான்; பிரியாமையும்-நம்மிற் பிரியாமையையும்; உயிர் ஒன்றாவதும்-இருவருக்கும்
உயிர் ஒன்றாவதையும்; பிரியின் பெரிதும் தரியாமையும்-பிரியுங்கால் பெரிதும் தமது
ஆற்றாமையையும்; ஒருங்கே நின்று சாற்றினர்-ஒரு சேர அக்காலத்தே நம் முன்னின்று கூறினார்;
அன்ன புரியாமையும் இதுவே-(இப்பொழுது அவற்றுள் பிரியாமை பொய்யாயிற்று) இனி உயிரொன்றாதலும்
பிரிவாற்றுதலும் ஆகிய அவற்றைச் செய்யாதிருத்தலும் இப்படியேதான் ஆதலின்; இனி நாம்
புகல்வது என்-இனி யாம் சொல்லக் கிடப்பது என்னையோ ஒன்றுமில்லை என்க.
(வி-ம்.)
தையன் மெய்யிற் பிரியாத பேரன்பினோனது தில்லைகட் பயின்றும் அன்பு பேணாது பிரிதல்
எங்ஙனம் வல்லராயினாரென்னுங் கருத்தால், பிரியாமை செய்து நின்றோன் றில்லைப்
பேரியலூரரென்றாள். பிரிவு காணப்பட்டமையின், அன்னவென்றது ஒழிந்த விரண்டையுமேயாம்.
அன்னபுரியாமையு மிதுவேயென்பதற்குப் பிரிவு முதலாகிய நமக்கின்னாதவற்றைத் தாம் செய்யாமையு
மிதுவேயாயிருந்த தெனினு மமையும். இன்னல் புரியாமையு மிதுவேயென்று பாடமோதுவாருமுளர்.
மெய்ப்பாடு-அழுகை. பயன்- செலவழுங்குவித்தல்.
|