திருக்கோவையார்
செய்யுள் 376
தோழியியற் பழித்தல்
அஃதாவது: தலைவன் பரத்தமை கருதிப் பெரிதும் வருந்துகின்ற
தலைவியை ஆற்றுவிக்கக் கருதிய தோழி தலைவனது குணத்தைப் பழித்துக் கூறியது என்றவாறு.
அதற்குச் செய்யுள்:-
திக்கி னிலங்குதிண்
டோளிறை
தில்லைச்சிற் றம்பலத்துக்
கொக்கி னிறக தணிந்துநின்
றாடிதென் கூடலன்ன
அக்கின் னகையிவ ணைய
வயல்வயி னல்குதலாற்
றக்கின் றிருந்தில னின்ற செவ்
வேலெந் தனிவள்ளலே.
|
தலைமகனைத் தகவிலனெனச் சிலைநுதற் பாங்கி தீங்கு செப்பியது.
(இ-ள்)
திக்கின் இலக்கு திண்தோள் இறை-திசைகளிலே சென்று விளங்காநின்ற திண்ணிய தோள்களையுடைய
கடவுளும்; தில்லைச் சிற்றம்பலத்துக் கொக்கின் இறகது அணிந்து நின்று ஆடி-தில்லையின்கண்
திருச்சிற்றம்பலத்தின்கண் கொக்கிறகினை அணிந்து நின்று ஆடுபவனுமாகிய சிவபெருமான்
எழுந்தருளியுள்ள; தென் கூடல் அன்ன-தென்றிசைக்கண்ணுள்ள மதுரை நகரத்தை யொத்த; அக்கு
இன் நகையிவள் நைய அயல்வயின் நல்குதலால்-அக்குமணி போன்ற இனிய பற்களையுடைய எம்பெருமாட்டி
இங்ஙனம் வருந்தும்படி பரத்தை மகளிர்க்கு அளி செய்தலால்; நின்ற செவ்வேல் எம் தனி
வள்ளல்-புகழால் நிலைபெற்றிருந்த சிவந்த வேலையுடைய எம்முடைய ஒப்பில்லாத வள்ளற்
பெருமான்; இன்று தக்கிருந்திலன்-இற்றை நாள் தன் பெருமைக்கேற்ப இருந்தானில்லை என்க.
(வி-ம்.)
எட்டுத் தோள்களும் எட்டுத்திசையினும் சென்று விளங்குதலின் திக்கின் இலங்கு திண்டோள்
இறை என்றார். இறை-கடவுள். ழுஎண்டோள் வீசிநின்றாடும் பிரான்ழு என அப்பரடிகளும்
ஓதுதலுணர்க. இறகது என்புழி அது பகுதிப்பொருட்டு. ஆடி-பெயர். அக்கு-அக்கு மணி (சங்குமணி).
நகை-பல். இவள் என்றது தலைவியை. இது முன்னிலைப்புறமொழி. அயல் என்றது பரத்தையரை.
இன்று தக்கிருந்திலன் என மாறுக. நின்ற-புகழால் நிலைபெற்று நின்ற என்க. எம் தனிவள்ளல்
என்றது இகழ்ச்சி. அயல்வயின் என்பதற்குப் பொருள் நசை உள்ளத்தராகலின் காமத்திற்கு
அயல் என்று உரைப்பினுமமையும். மெய்ப்பாடு-அழுகையைச் சார்ந்த நகை. பயன்-தலைவியை
ஆற்றுவித்தல்.
|