614கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 391 ஆம் செய்யுள்:
புனலாட்டுவித்தமை கூறிப்புலத்தல்

     அஃதாவது: தலைவனோடு ஊடியிருந்த தலைவி அவன் ஆற்றாமை வாயிலாக அணைந்தவழி அவன் ஊரார் அறியும்படி ஒரு பரத்தையைப் புனலாட்டுவித்த செய்தியைக் கூறி முன்னிலைப் புறமொழியாக இவர் இங்கு நிற்கின்றதனையே யான் பொறுக்ககில்லேன் என்று கூறிப்புலத்தல் என்றவாறு, அதற்குச் செய்யுள்:-

செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம்
     பலவர்தில் லைநகரோர்
பந்தார் விரலியைப் பாய்புன
     லாட்டிமன் பாவியெற்கு
வந்தார் பரிசுமன் றாய்நிற்கு
     மாறென் வளமனையிற்
கொந்தார் தடந்தோள் விடங்கா
     லயிற்படைக் கொள்ளவரே.

ஆங்கதனுக் கழுக்க மெய்தி வீங்கு மென்முலை விட்டுரைத்து.

     (இ-ள்) கொந்து ஆர் தடந்தோள் விடம்கால் அயில்படைக் கொற்றவர்- பூங்கொத்துமாலை நிறைந்த பெரிய தோளினையும் நஞ்சைக்காலும் கூரிய படையினையுமுடைய கொற்றவராகிய நம் பெருமான்; பாவி எற்கு என் வளமனையில் நிற்குமாறு - தீவினையாட்டியாகிய என் பொருட்டு எனது வளமனையில் வந்து நிற்கின்றபடி; செந்தார் நறும் கொன்றைச் சிற்றம்பலவர் தி்ல்லை நகர்-சிவந்த மாலையாகிய நறிய கொன்றைமலரையுடைய திருச்சிறம்பலவாணனுடைய தில்லை நகரத்தின் வரைப்பில்; ஓர் பந்து ஆர் விரலியைப் பாய்புனல் ஆட்டி - பந்து பயன்ற விரலையுடைய பரத்தை மகள் ஒருத்தியைப் பாய்ந்த நீரின்கண் ஆட்டுவித்து; வந்தார் பரிசும் அன்றாய்- வெளிப்படத் தவறு செய்து வந்தார் சிலர் நிற்கும் தன்மை போல நில்லாராய், தவறு செய்யாதார் வந்து நிற்றல் போல வந்து நின்றராயின் அவர்செயல் பொறுத்தல் அரிது என்க.

     (வி-ம்.) தார் - மாலை, தில்லை நகர் ஓர் பந்தார் விரலி என்றியைப்பினுமாம். புனலாட்டி மன் என்புழி மன் ஒழியிசைக்கண் வந்தது. கொற்றவர் தவறு செய்தார் வந்து நிற்குமாற நிற்பாராயின் ஒரே வழி யான் பொறுத்தலும் கூடும். இவரோ தவறு செய்யாதார் போல ஏக்கழுத்தம்பட வந்து நிற்கின்றனர். அவர் நிலையைக் கண்டு பொறுத்துக்கோடல் எனக்கு அரிது என்றவாறு, நிற்குமாறு என் என வினவாக்கினம் அமையும். மெய்ப்பாடு - வெகுளி, பயன் - ஊடல் தீ்ர்தல்.