திருக்கோவையார் 315 ஆம் செய்யுள்
வருத்தந்தணித்தல்
அஃதாவது:
தலைவன் பகைதணிவினைக்குப் பிரிவன் என்று தலைவிக் குணர்த்திய தோழி அவள் பெரிதும்
வருந்துதல் கண்டு அன்புடையாய்! அவலம் கொள்ளேல்! அவர் நின்னைப் பிரியார்; யான்
பொய் மொழிந்தேன்காண்! எனக்கூறி, அவளது வருத்தந் தணியா நிற்றல் என்றவாறு. அதற்குச்
செய்யுள்:-
நெருப்புறு வெண்ணெயும்
நீருறு
முப்பு மெனவிங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல்
பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின்
மிகுந்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்றில்லை
போலுந் திருநுதலே.
|
மணிப்பூண் மன்னவன் தணிப்ப தில்லை அஞ்சல் பொய்யென வஞ்சியைத் தணித்தது.
(இ-ள்)
மிக்க விருப்பு உறுவோரை விண்ணோரின் மிகுத்து-தன் திருவடிக்கண் பேரன்பு கொள்ளும்
அடியார்களைத் தேவர்களினும் பார்க்க உயரச் செய்து; நண்ணார் கழியத் திருப்புறு சூலத்தினோன்
தில்லை போலும் திருநுதல்-பகைவராகினார் அழிந்தொழியும்படி விதிர்க்கப்படும் சூலப்படையையுடைய
சிவபெருமானுடைய தில்லை நகரத்தை ஒக்கும் அழகிய நெற்றியினையுடையாய்; பொருப்பு உறு
தோகை-மலையினைச் சேர்ந்த மயிலை ஒப்பாய்!; நெருப்பு உறு வெண்ணெயும் நீர்உறும் உப்பும்
என இங்ஙனே; புலம்புறல்-தீயையுற்ற வெண்ணெயும் நீரையுற்ற உப்பும்போல நீ இவ்வாறு உருகித்
தனிமையுறாதொழிக; அன்பர் போக்குப் பொய்-நின் காதலர் பிரிந்து போதல் பொய்காண்
என்க.
(வி-ம்.)
பொருப்பு-மலை. தோகை: ஆகுபெயர். புலம்புறல்-அல்லீற்று எதிர்மறை வியங்கோள். அன்பர்
போக்குப் பொய் என மாறுக. விருப்புறுவோர்-அடியார். நண்ணார்-பகைவர். திருப்புறுதல்;
ஒருசொல்; விதிர்த்தல் என்க. மிகுத்து என்னும் வினைப்பகுதி கொண்டு முடிந்தது. மெய்ப்பாடு-பெருமிதம்.
பயன்-தலைவியை ஆற்றுவித்தல்.
|