திருக்கோவையார் 386 ஆம் செய்யுள்:
பானனொடு வெகுளுதல்
அஃதாவது:
தோழிக்கு வாயில் மறுத்த தலைவி, பின்னர் வாயிலாக வந்த பாணனை நோக்கி வெகுண்டு
கூறியது என்றவாறு. அதற்குச்செய்யுள்:-
மைகொண்ட கண்டவர்
வயல்கொண்ட
தில்லை கூரர்நின்வாய்
மெய்கொண்ட வன்பின ரென்பதென்
விள்ளா வருள்பெரியர்
வைகொண்ட வூசிகொற் சேரியின்
விற்றெம்மில் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை
யாத்தின்னி போந்ததுவே.
|
மன்னியாழ்ப் பாணன் வாயில் வேண்ட மின்னிடை மடந்தை வெகுண்டு ரைத்தது.
(இ-ள்)
மைகொண்ட கண்டர் வயல் கொண்ட தில்லை மல்கு ஊரர்-கருமை நிறம் பொருந்திய மிடற்றினையுடைய
சிவபெருமானுடைய கழனிகள் பொருந்திய தில்லை நகரத்தின்கண் உள்ளவராகிய வளம் பெருகிய
ஊரையுடைய தலைவர்; நின்வாய் மெய்கொண்ட அன்பிலர் என்பது என்-நின்பால் உண்மையான
அன்பைடையவர் என்று நீ சொல்லவேண்டுமோ; விள்ளா அருள் பெரியர்-அவர் எம்மிடத்தே
நீங்காத அருளுடைய பெரியாரல்லரோ; அதுகிடக்க; வைகொண்ட ஊசி கொல்சேரியின் விற்று-கூர்மை
பொருந்திய உசியைக் கொல்லர் சேரியிலே விற்று; எம் இல் வண்ணவண்ணப் பொய் கொண்டு
நிற்றல் உற்றோ-எம்முடைய இல்லத்தில் வந்து நின்னுடைய நல்ல நல்ல பொய்யைக் கொண்டுவந்து
சொல்லவோ; புலை ஆதின்னி-புலையனே! ஆவைத் தின்போனே!; போந்தது-ஈண்டு நீ வந்தது
இது மிகவும் நன்று என்க.
(வி-ம்.)
மை-கருநிறம். வளமல்கும் ஊரர் என்க. ஊரர் மெய்கொண்ட அன்பினர் என்னுந்துணையும்
தலைவி பானன் கூற்றைக் கொண்டு கூறியபடியாம். பாணனே! நீ பொய்தான் சொல்லப் புகுந்தனை,
மெய்கொண்ட அன்பினர் என்பானேன் நீங்காத அருட் பெரியார் என்னலாமே! என்று அசதியாடுகிறாள்
என்க. வை-கூர்மை. கொல்லத்தெருவில் ஊசி விற்பது என்பது பழமொழி. வண்ண வண்ணபொய்
என்றது நல்ல நல்ல பொய் என்றவாறு. ஆத்தின்னி என்பதனைப் படர்க்கையாக்கி முன்னிலைப்
புறமொழியாக்கினுமாம். விகு நின் என்றும் பாடம். மெய்ப்பாடு-வெகுளி. பயன். வாயின்
மறுத்தல்
|