மூலமும் உரையும்633



திருக்கோவையார் 387 ஆம் செய்யுள்
பாணன் புலந்துரைத்தல்.

     அஃதாவது; தலைவனால் ஏவப்பட்டு வந்து வாயில் வேண்டிய பாணனைத் தலைவி சினந்து வைதாளாக. அதுகண்ட பானன் அன்னாய்! நீ என்னை வெகுண்டு எறித்தற்குக் கல்லெடுக்கவேண்டா. சினம் தணிக. நீ பல்லாண்டு வாழ்வாயாக. யான் நின்னைத் தொழுத் செல்வேன் எனப் (பாணன்) புலந்து கூறியது என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

கொல்லாண் டிலங்கு மழுப்படை
     யோன்குளிர் தில்லையன்னாய்
வில்லான் டிலங்கு புருவம்
     நெரியச்செவ் வாய்துடிப்பக்
கல்லொண் டெடேல்கருங் கண்சிவப்
     பாற்று கறுப்பதன்று
பல்லாண் டடியே னடிவலங்
     கொள்வான் பணிமொழியே.

கருமலர்க் கண்ணி கனன்று கட்டுரைப்ப புரியாழ்ப் பாணன் புறப் பட்டது.

     (இ-ள்) கொல் ஆண்டு இலங்கு மழுப்புடையோன் குளிர் தில்லை அன்னாய்-கொல்லுத்தொழில் அவ்விடத்தே விளங்கும் மழுவாகிய படையையுடைய சிவபெருமானுடைய குளிர்ந்த தில்லை நகரத்தை ஒக்கும் எம்பெருமாட்டியே! கேள்; வில் ஆண்டு இலங்கு புருவம் நெரியச் செவ்வாய் துடிப்ப-அழகாலே வில்லை அடிமைகொண்டு விளங்காநின்ற நின் புருவம் நெரியவும் சிவந்த வாய் துடிப்பவும்; ஆண்டுக் கல் எடேல்-அவ்விடத்தே என்னை எறிதற்குக் கல்லை எடுத்தல் வேண்டா; கருங்கன் சிவப்பு ஆற்று-நின் கரிய கண்களின் சிவப்பினை ஆற்றுவாயாக; கறுப்பது அன்று-யான் நினக்குக் கூறியது நின்னால் வெகுளப்படுவதொன்றன்று; பல்லாண்டு-நீ பல்லாண்டு வாழ்வாயாக; பணிமொழி-பணிமொழியினை யுடையோய்; அடியேன் அடி வலங்கொள்வன்-யான் வேண்டிய இடத்திற்குப் போக அடியேன் அடியை வலங்கொள்ளா நின்றேன் என்க.

     (வி-ம்.) கொல்-கொல்லுத்தொழில். வில்லை அடிமையாகக் கொண்டு இலங்கு புருவம் என்க. கறுத்தல்-வெகுளுதல். பல்லாண்டு-பல ஆண்டு வாழவேண்டும் என்னும் ஒரு குறிப்புச்சொல். மெய்ப்பாடு-அச்சம். பயன்-சினந் தணித்தல்.