642கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 184 ஆம் செய்யுள்:
அன்னமோடாய்தல்

     அஃதாவது: தலைவன் அலர்மொழி அடங்குதற் பொருட்டு ஒரு வழித் தணந்தானாக, அப்பிரிவாற்றாத தலைவி அன்னப்பறவையை நோக்கி அவனைப்பற்றி ஆராய்ந்து கேட்டல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

பகன்றா மரைக்கண் கெடக்கடந்
     தோன்புலி யூர்ப்பழனத்
தகன்றா மரையன்ன மேவண்டு
     நீல மணியணிந்து
முகன்றாழ் குழைச்செம்பொன் முத்தணி
     புன்னையின் னும்முரையா
தகன்றா ரகன்றே யொழிவார்கொல்
     லோநம் மகன்றுறையே.

மின்னிடை மடந்தை யன்ன்மோ டாய்ந்தது.

     (இ-ள்) பகன் தாமரைக்கண் கெட-பகன் என்னும் பெயரையுடைய கதிரவனுடைய தாமரைமலர் போன்ற கண்கெடும்படி செய்து; கடந்தோன்-அவனை வென்ற சிவபெருமானுடைய; புலியூர்ப் பழனத்து அகன் தாமரை அன்னமே-புலியூரைச் சூழ்ந்துள்ள கழனியின்கண்ணதாகிய அகன்ற தாமரை மலரில் வாழுகின்ற அன்னப்பறவையே; வண்டு நீல மணி அணிந்து செம்பொன் முத்து அணி-வண்டாலிய நீல மணியை யணிந்து தாதாகிய செம்பொன்னையும் அரும்பாகிய முத்தையும் அணிந்த; முகந்தாழ் குழைப்புன்னை-முகம் தாழ்ந்து நிற்கின்ற தளிரையுடைய இப்புன்னைமரமோ; இன்னும் உரையாது-இந்நிலையின்கண்ணும் யாதொன்றும் சொல்லுகின்றதில்லை; அகன்றார்-எம்மைப் பிரிந்து சென்ற தலைவர்; அகன் துறை அகன்றே ஒழிவர் கொல்லோ-அகன்ற நமது கடற்றுறையை இனி எப்பொழுதும் அகன்றே விடுவரோ யான் அறிகின்றிலேன் நீயேனும் கூறுவாயா என்க.

     (வி-ம்.) பகன்-பன்னிரு கதிரவருள் ஒருவன். தாமரை-மலர்க்கு ஆகுபெயர். கடத்தல்-வெல்லுதல். முகன் தாழ் குழை என்பது இரு பொருள்பட நின்றது. யான் இத்தன்மையேனாகவும் எந்நிலை நோக்காது முகங்கவிழ்ந்து நிற்கின்ற இப்புன்னை எனக்கு ஒன்று சொல்லுமோ என்றும் ஒரு பொருள் தோன்றுதல் காண்க. நீயேனும் கூறுவாயாக என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு-அழுகை. பயன்-அயாவுயிர்த்தல்.