மூலமும் உரையும்647



திருக்கோவையார் 149 ஆம் செய்யுள்
வழியருமைகூறி மறுத்தல்

     அஃதாவது: தலைவன் தோழியின்பால் இரவுக்குறி வேண்ட அவள் ‘யாங்கள் வாழுமூர் மிகவும் ஏற்றிழிவு உடைத்து. அவ்வழியின்கண் நின் நெஞ்சும் ஏறுதல் அரிது’ எனக் கூறி இரவுக்குறி மறுத்து என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

விசும்பினுக் கேணி நெறியன்ன
     சின்னெறி மேன்மழைதூங்
கசும்பினிற் றுன்னி யளைநுழைந்
     தாலொக்கு மையமெய்யே
யிசும்னினிற் சிந்தைக்கு மேறற்
     கரிதெழி லம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான்
     மலயத்தெம் வாழ்பதியே.

இரவர லேந்தல் கருதி யுரைப்பப் பருவரற் பாங்கி யருமை யுரைத்தது.

     (இ-ள்) ஐய-ஐயனே; விசும்பினுக்கு ஏணி நெறி அன்ன சில்நெறி மேல்-வானுலகத்தில் ஏறுதற்கு வைத்தோர் ஏணியையொத்த சிறிய வழியின்மேல்; மழை தூங்கு அசும்பினில் துன்னி அளை நுழைந்தால் ஒக்கும்-மழை இடையறாது பெய்தலால் இடையிடையேயுண்டான நீரொழுக்குடைய வழியில் சென்று பொருந்தி ஏறுங்கால் அவ்வழியின் சிறுமையால் அளையில் நுழைவதுபோல் இருக்கும்; எழில் அம்பலத்து பசும் பனிக்கோடு மிலைந்தான் மலயத்து எம்வாழ்பது-அழகிய தில்லைத்திருச்சிற்றம்பலத்தின்க ணுளதாகிய குஈர்ந்த இளம்பிறையைச் சுடிய அச்சிவபெருமானுடைய பொதியமலையின்கண் யாங்கள் வாழுகின்ற சீறூர்; இசும்பினில் சிந்தைக்கும் ஏறகு அரிதே-வழுக்குதலுடைமையின் நின் நெஞ்சிற்கும் ஏறுதற்கரியதொன்றாயிருக்கும் அதனால் நீ ஆங்கு வருதல் கூடாது என்க.

     (வி-ம்.) விசும்பு-வானுலகம். சின்னெறி என்புழிச் சின்மை சிறிய என்னும் பொருள் குறித்து நின்றது. அசும்பு-நீரொழுக்கு; சிறுமை, சிறுதிவலை என்பாருமுளர். அளை-குகை. ஒடுங்கிய வழிக்கு அளை உவமையாம். இசும்பு-வழுக்குதல். அதனால் அங்கு நீ வருதல் கூடாது என்பது குறிப்பெச்சம். அம்பலம்-திருச்சிற்றம்பலம். இளம்பிறை கோடு போறலின் பனிக்கோடு என்றார். பசுமை இளமை குறித்து நின்றது. மலயம்-பொதியமலை. மெய்ப்பாடு: இளிவரல். பயன்-வரைவுகடாதல்.