திருக்கோவையார் 323 ஆம் செய்யுள்:
பருவங்காட்டி வற்புறுத்தல்
அஃதாவது:
வேந்தற்குற்றுழிப் பிரிந்த தலைவன் குறித்துப்போன கார்ப்பருவம் வந்துற்றதாக; அவன்
வரவு கானாது வருந்திய தலைவிக்குத் தோழி அவர் கூறிய கார் வந்தமையால் இன்றேனும்
நாளையேனும் அவர் தேர் வருதல் தப்பாது என்று கூறி ஆற்றுவித்தது என்றவாறு. அதற்குச்
செய்யுள்:-
பூண்பதென் றேகொண்ட
பாம்பன்
புலியூ ரரன்மிடற்றின்
மாண்பதென் றேயெண வானின்
மலரும் மணந்தவர்தேர்
காண்பதன் றேயின்று நாளையிங்
கேவரக் கார்மலர்த்தேன்
பாண்பதன் றேர்குழ லாயெழில்
வாய்த்த பனிமுகிலே.
|
கார்வருமெனக் கலங்கு மாதரைத் தேர்வருமெனத் தெளிவித்தது.
(இ-ள்)
கார் மலர்ந்தேன் பாண் பதன் தேர் குழலாய்-கார்காலத்து மலரையூதுகின்ற வண்டுகளினது
பாடலின் செவ்வியை ஆராய்தற் கிடனான கூந்தலையுடைய பெருமாட்டியே!; பூண்பது என்றே கொண்ட
பாம்பன்-அணிந்து கொள்கின்ற அணிகலன் என்றே கொள்ளப்பட்ட பாம்பினையுடையவனும்;
புலியூர் அரன்-புலியூரில் எழுந்தருளியுள்ள அரனுமாகிய இறைவனுடைய; மிடற்றின் மாண்பது
என்றே எண-மிடற்றினது அழகென்றே கருதும்படி; எழில் வாய்த்த பனிமுகில் வானின் மலரும்-கருமையான
அழகு வாய்ந்த குளிர்ந்தமேகங்கள் வானத்தே பரவா நின்றனாதனால்; மணந்தவர் தேர்
இன்று நாளை இங்கே வரக் காண்பது அன்றே-நம்மைக் கலந்த தலைவருடைய தேர் இன்றாதல்
நாளையாதல் இங்கு வாராநிற்ப யாம் காண்பது உறுதி அல்லவோ எனவே நீ வருந்தற்க! என்க.
(வி-ம்.)
பூண்பதென்றே கொண்ட பாம்பன் என்றது பாம்பை அணிகலனாகக் கொண்டவன் என்றவாறு. மாண்பது
என்புழி அது பகுதிப்பொருளது. எண-எண்ண: இடைக்குறை. மலர்தல்-பரவுதல். காண்பதன்றே-காண்பது
உறுதியன்றோ என்றவாறு. இன்றாதல் நாளையாதல் என்க. தேன்-வண்டு. பாண்-பாட்டு. பதன்-செவ்வி.
தேர்குழல்: வினைத்தொகை. நீ வருந்தற்க என்பது குறிப்பெச்சம். மேய்ப்பாடு-அழுகையைச்சார்ந்த
பெருமிதம். பயன்-தலைவியை ஆற்றுதல்.
|