678கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 282 ஆம் செய்யுள்
மெலிவுகண்டு செவிலி கூறல்

     அஃதாவது: தலைவி கற்புக்கடம் பூண்ட செய்து அறியாமையால் ஏதிலார் அவளை மணம்பேசி வந்தாராக. அஃதுணர்ந்த தலைவி பெரிதும் வருந்தி உடல் மெலிவாளாயினள். அவள் மெலிவினைக் கண்ட செவிலித்தாய் அடிமுதல் குடிகாறும் கூர்ந்து நோக்கி இவள் இங்ஙனம் மெலிதற்குக் காரணம் என்னை இவள் தெய்வத்தால் தீண்டப்பட்டாளோ என்று ஐயுற்றுக் கூறியது என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

வேயின மென்றோள் மெலிந்தொளி
     வாடி விழிபிறிதாய்ப்
பாயின மேகலை பண்டைய
     ளல்லள் பவளச்செல்வி
யாயின வீச னமரர்க்
     கமரன்சிற் றம்பலத்தான்
சேயின தாட்சியிற் பட்டன
     ளாமித் திருந்திழையே.

வண்டமர் புரிகுழ லொண்டொடி மெலிய வாடா நின்ற கோடாய் கூறியது.

     (இ-ள்) வேய் இன மெந்தோள் மெலிந்து-மூங்கிலை ஒத்த மெல்லிய தோள் மெலிந்து; ஒளிவாடி விழி பிறிதாய்-ஒளிமழுங்கிக் கண்தம் இயல்பிழந்து வேறாகி; பாயின மேகலை பண்டையள் அல்லள்-பரந்த மேகலையணியையுடைய என் மகள் பண்டுபோல இருந்திலள் அதனால்; இத்திருந்திழை-இவள்; பவளச் செல்வி ஆயின ஈசன்-திருமேனி பவளத்தின் நிறமாகிய இறைவனும்; அமரர்க்கு அமரன்-தேவர்க்கும் தேவனும்; சிற்றம்பலத்தான்-திருச்சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளியுள்ளவனுமாகிய சிவபெருமானுடைய; சேயினது ஆட்சியின் பட்டனளாம்-மகனாகிய முருகப்பெருமானுடைய ஆட்சியின்கன் அமைந்த இடத்தில் அகப்பட்டாள் போலும் என்க.

     (வி-ம்.) வேய்-மூங்கில். ஒளிவாடி என்பதும் விழி பிறிதாய் என்பதும் சினை வினை. மேகலை: ஆகுபெயர். பண்டையன் அல்லள் என்றது பண்டிருந்தாற்போல இருந்திலள் என்றவாறு. சிற்றம்பலத்தின் சேய்-முருகன். ஆட்சியாவது அவனது ஆணையால் மக்கள் சேர்தற்கியலாத இடம். அவ்விடத்திற் சேர்ந்தவர் தெய்வகுறை யுடையராய் நலிவர் என்ப்னது கருத்து. மெய்ப்பாடு-மருட்கை. பயன் தலைவிநிலையுணர்தல்.