மூலமும் உரையும்689



திருக்கோவையார் 349 ஆம் செய்யுள்
தேர்வரவு கூறல்

     அஃதாவது: பொருள்வுயிற் பிரிந்த தலைவன் தான் குறித்துச் சென்றபடி வானத்தில் முகில்கள் குழுமிக் கார்ப்பருவம் தொடங்கும் பொழுது மீண்டுவந்தானாக, அவன் தேர்வரவுகண்ட தோழி இம்முகில் இவள் உயிரை வெகுளாநின்றபொழுது தேர்வந்து காத்தமையால் யாராலும் போகூழை வெல்லுமாறில்லை என்று தலைவிக்குக் கூறி மகிழ்வித்தது என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

பாவியை வெல்லும் பரிசில்லை
     யேமுகில் பாவையஞ்சீர்
ஆவியை வெல்லக் கறுக்கின்ற
     போழ்தத்தி னம்பலத்துக்
காவியை வெல்லு மிடற்றோ
     னருளிற் கதுமெனப்போய்
மேவிய மாநிதி யோடன்பர்
     தேர்வந்து மேவினதே.

வேந்தன் பொருளொடு விரும்பி வருமென ஏந்திழைப் பாங்கி இனிதியம் பியது.

     (இ-ள்) முகில் பாவை அம்சீர் ஆவியை வெல்லக் கறுக்கின்ற போழ்தத்தின்-முகிலானது பாவைபோல்வளாகிய தலைவியின் சிறப்புடைய உயிரை அகற்றும் பொருட்டுச் சினந்தெழாநின்ற பொழுதின்கண்; அம்பலத்துக் காவியை வெல்லும் மிடற்றோன் அருளின்-திருச்சிற்றம்பலத்தின்கண் எழுந்த்ருளியுள்ள கருங்குவளை மலரை வெல்லும் மிடற்றையுடைய இறைவன் அருள்போல; போய் மேவிய மா நிதியோடு-சென்று தேடிய பெருஞ்செல்வத்தோடே; அன்பர் தேர் கதும் என வந்து மேவினது-நங்காதலர் தேர் ஞெரேலென வந்து நம் முன்றிலிற் பொருந்திற்று அதனால்; பாவியை வெல்லும் பரிசு இல்லையோ-ஊழை வெல்லுந்தன்மை யாவர்மாட்டும் இல்லைபோலும் என்க.

     (வி-ம்.) முகில் தலைவியைக் கொல்லத்தொடங்கிய செயல் ஊழால் தடுக்கப்பட்டு நிறைவேறாதொழிந்தது. ஆதலின் யாராலும் ஊழை வெல்லுதல் இயலாது என்றவாறு. பாவி என்றது ஊழை. ஒருவன் முயலும் காரியம் தடைபடுதற்கு அவன் முன் செய்த தீவினையே காரணமாதலின் அதனைப் பாவி என்றாள். பாவியை வெல்லும் பரிசில்லை என்றது உலகியலின் மேல்வைத்துக் கூறியபடியாம். எனவே இனி ஒருவாற்றானும் இவள் உயிர் வாழ்தல் அரிதென் கல்.-44