திருக்கோவையார்
264 ஆம் செய்யுள்
செலவு நினைந்துரைத்தல்
அஃதாவது:
தலைவன் வரவுடம்படாமையின் தோழி அவனொடு புலந்து கூறக்கேட்டு, தலைவி அக்குறிப்பறிந்து
தோழியை நோக்கி இக்கல்வழியில் நீர் எப்படி வந்தீர் என்று நம்மை நோக்கி இரங்கி
வினவுவார் இருப்பாராயின் இவ்விருளின்கண் யாம் அவர் இருக்குமிடத்திற்குச் செல்லுதல்
இயலாத காரியமில்லை. ஆனால் அவ்வாறு வினவுவார் இல்லை என்று செலவு நினைத்து கூறுதல்
என்பதாம். அதற்குச் செய்யுள்:-
வல்சியி
னெண்கு வளர்புற்
றகழமல் கும்மிருள்வாய்ச்
செல்வரி தன்றுமன் சிற்றம்
பலவரைச் சேரலர்போற்
கொல்கரி சீயங் குறுகா
வகைபிடி தானிடைச்செல்
கல்லத ரென்வந்த வாறென்
பவர்பெறிற் கார்மயிலே.
|
பாங்கி நெருங்கப் பணிமொழி மொழிந்து
தேங்கமழ் சிலம்பற்குச் சிறைப்புறக் கிளவி.
(இ-ள்) கார்மயிலே-கார்காலத்து
மயிலைஒத்த தோழியே! கேள்; சிற்றம்பலவரைச் சேரலர்போல்-தில்லைத் திருச்சிற்றம்பலத்தில்
இன்பக்கூத்தாடும் இறைவனுடைய திருவடிகளை வணங்காதவர் வருந்துதல் போல வருந்தியும்; சீயம்
கொல் கரி குறுகாவகை பிடி தான் இடைச் செல் கல் அதர்-சிங்கம் கொலைத் தொழிலையுடைய
களிற்றியானையைச் சென்று அடையாதபடி பிடியானை அவ்விரண்டனுக்கும் இடையே சென்று புகுதற்கிடனான
மலைவழியின்கண்; வந்தவாறு என் என்பவர்ப்பெறின்-நீங்கள் வந்தவகை எங்ஙனம் என்று
நமக்கிரங்கி வினவுவாரைப் பெற்றேமாயின்; வல்சியின் எண்கு வளர்புற்று அகழ மல்கும்
இருள்வாய்-குரும்பியாகிய உணவு காரணமாகக் கரடி உயர்ந்த புற்றை அகழா நிற்ப மிகாநின்ற
இருளின்கண்; செல்வு அரிதன்று மன்-அவர் இருக்கும் இடத்திற்குச் செல்லுதல் இயலாததன்று;
சென்றே மாயினும் அவ்வாறு நம்மை வினவுவார் இல்லையாம் என் செய்தும் என்பதாம்.
(வி-ம்.) மன்: ஒழியிசைக்கண்
வந்தது. கல்லதர்-மலையிற் செல்லும் வழி. வல்சி-உணவு. எண்கு-கரடி. மங்குதல்-மிகுதல்.
செல்வு-செலவு. கொல்கரி: வினைத்தொகை. சீயம்-சிங்கம். பிடி-பெண்யானை. கார்மயில்:
அன்மொழித்தொகை. மெய்ப்பாடு-அழுகையைச் சார்ந்த இளிவரல். பயன்-வரைவுகடாதல்.
|