100. தூது கண்டு அழுங்கல்
 
   
வளைந்து நின்று உடற்றும் மலி குளிர்க்கு உடைந்து  
முகில்-துகில் மூடி மணி நெருப்பு அணைத்துப்  
புனம் எரி கார்-அகில் புகை பல கொள்ளும்  
குளவன் வீற்றிருந்த வளர் புகழ்க் குன்றமும்,  
புதவு தொட்டெனத் தன் புயல் முதிர் கரத்தினை
5
வான் முறை செய்த கூன் மதிக் கோவும்,  
தெய்வம் அமைத்த செழுந் தமிழ்ப் பாடலும்,  
ஐந்தினில் பங்கு செய்து இன்பு வளர் குடியும்,  
தவல் அருஞ் சிறப்பொடு சால்பு செய்து அமைந்த  
முது நகர்க் கூடலுள்--மூவாத் தனி முதல்
10
(ஏழ் இசை முதலில் ஆயிரம் கிளைத்த  
கானம் காட்டும் புள்-அடித்துணையினர்  
பட்டடை எடுத்து, பாலையில் கொளுவி,  
கிளையில் காட்டி, ஐம் முறை கிளத்தி,  
குரலும் பாணியும் நெய்தலில் குமட்டி,
15
விளரி எடுத்து, மத்திமை விலக்கி,  
ஒற்றைத் தாரி ஒரு நரம்பு இரட்ட,  
விழுந்தும் எழுந்தும் செவ்வழி சேர்த்தி,  
குருவி விண் இசைக்கும் அந்தரக் குலிதம்  
புறப்படு பொதுவுடன் முல்லையில் கூட்டி,
20
விரிந்தவும் குவிந்தவும் விளரியில் வைத்து,  
தூங்கலும் அசைத்தலும் துள்ளலும் ஒலித்தலும்  
ஆங்கு-அவை நான்கும் அணி உழை ஆக்கி,  
பூரகம், கும்பகம், புடை எழு விளரி,  
துத்தம், தாரம், கைக்கிளை, அதனுக்கு
25
ஒன்றினுக்கு ஏழு நின்று நனி விரித்து,  
தனி முகம் மலர்ந்து தம் இசை பாட,  
கூளியும் துள்ள, ஆடிய நாயகன்)  
இணை அடி ஏத்தும் இன்பினர்க்கு உதவும்  
திருவறம் வந்த ஒருவன் தூதுகள்,
30
இன்பமும், இயற்கையும், இகழாக் காமமும்,  
அன்பும், சூளும், அளியுறத் தந்து, என்  
நெஞ்சமும், துயிலும், நினைவும், உள்ளமும்,  
நாணமும், கொண்ட நடுவினர்--இன்னும்  
கொள்வதும் உளதோ? கொடுப்பதும் உளதோ?--
35
செய் குறி இனிய ஆயின்:  
கவ்வையின் கூறுவிர், மறைகள் விட்டு எமக்கே.
உரை