14. தேர் வரவு கூறல்  
 
சலியாப் பராரைத் தமனியப் பொருப்பு எனும்  
ஒரு கால் சுமந்த விண் படர் பந்தரின்,  
மூடிய நால் திசை முகில்-துகில் விரித்து;  
பொற்சிலை வளைத்து, வாயில் போக்கி;  
சுருப்பு அணி நிரைத்த கடுக்கை அம் பொலந் தார்
5
நிரைநிரை நாற்றி; நெடுங் காய் மயிர் அமைத்து;  
ஊதையில் அலகு இட்டு; உறை புயல் தெளித்து;  
போற்றுறு திருவம் நால் திசைப் பொலிய;  
மரகதத் தண்டின் தோன்றி விளக்கு எடுப்ப;  
குடத்தியர் இழுக்கிய அளை சிதறிய போல்
10
கிடந்தன ஆம்பி பரந்தன மறைப்ப,  
பிடவு அலர் பரப்பிப் பூவை பூ இட;  
[உயர் வான் அண்டர் கிளை வியப்பு எய்த,]  
உறவு, இணை, நட்பு, கிளை, வியப்பு எய்த,  
முகில் முழவு அதிர; ஏழ் இசை முகக்கும்
15
முல்லை யாழொடு சுருதி வண்டு அலம்ப;  
களவு அலர் சூடி, புறவு பாட்டு எடுப்ப;  
பசுந் தழை பரப்பிக் கண மயில் ஆல;  
முல்லை அம் திருமகள், கோபம் வாய் மலர்ந்து,  
நல் மணம் எடுத்து, நாள் அமைத்து அழைக்க--
20
வரி வளை முன்கை வரவர இறப்பப்  
போன நம் தனி நமர், புள் இயல் மான் தேர்,  
கடு விசை துரந்த கான் யாற்று ஒலியின்,  
எள்ளினர் உட்க, வள் இனம் மடக்கி, முன்  
தோன்றினர்: ஆகலின், நீயே, மடமகள்!
25
(முன் ஒரு காலத்து, அடுகொலைக்கு அணைந்த  
முகில் உருப் பெறும் ஓர் கொடுமரக் கிராதன்,  
அரு மறைத் தாபதன் அமைத்திடு செம்மலை,  
செருப்புடைத் தாளால், விருப்புடன் தள்ளி,  
வாய் எனும் குடத்தில் வரம்பு அற எடுத்த
30
அமுது கடல் தள்ளும் மணி நீர் ஆட்டி,  
பின்னல் விட்டு அமைத்த தன் தலை மயிர் அணை  
திரு மலர் விண் புக மணி முடி நிறைத்து,  
வெள் வாய் குதட்டிய விழுதுடைக் கருந் தடி  
வைத்து அமையாமுன் மகிழ்ந்து அழுது உண்டு, அவன்
35
மிச்சிலுக்கு இன்னும் இச்சை செய் பெருமான்)  
கூடல் நின்று ஏத்தினர் குலக் கிளை போலத்  
துணர்ப் பெறு கோதையும் ஆரமும் புனைக;  
புதை இருள் துரக்கும் வெயில் மணித் திருவும்,  
தண்ணம் பிறையும், தலை பெற நிறுத்துக;
40
இறை இருந்து உதவா நிறை வளைக் குலனும்;  
பெருஞ் சூடகமும், ஒருங்கு பெற்று அணிக;  
நட்டுப் பகையினர் உட்குடி போல,  
உறவு செய்து ஒன்றா நகை தரும் உளத்தையும்,  
கொலையினர் நெஞ்சம் கூண்ட வல் இருள் எனும்
45
ஐம் பால் குழலையும், அணி நிலை கூட்டுக;  
விருந்து கொண்டு உண்ணும் பெருந் தவர் போல,  
நீங்காத் திருவுடை நலனும்  
பாங்கில் கூட்டுக, இன்பத்தில் பொலிந்தே!  
உரை